Home கோவில்கள் அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Visvesvaraya Temple, கோயம்புத்துார்

அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Visvesvaraya Temple, கோயம்புத்துார்

அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Visvesvaraya Temple, கோயம்புத்துார்

Arulmigu Visvesvaraya Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Visvesvaraya Temple

அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருக்கோயில் மூலவர்:

விஸ்வேஸ்வரர்

அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருக்கோயில் தாயார்:

விசாலாட்சி

அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருக்கோயில் தல விருட்சம்:

அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

கோயம்புத்துார்

அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருக்கோயில் வரலாறு:

இத்தலம் சுமார் 1000 ஆண்டுகள் தொன்மைவாய்ந்தது. ஆதியில் கோவை நகரை மைசூர் மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். கோவையை ஒட்டி உள்ள பகுதியை மருதைய்ய யதார்த்தி, வீரப்ப யதார்த்தி என்ற இரு சகோதரர்கள் ஆண்டு வந்தனர். வண்டிப் பேட்டை பகுதியில் காசி நர்மதை நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட பாணத்தை ஆவுடையாருடன் இணைத்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் விஸ்வேஸ்வரர் எனும் திருநாமத்தில் விளங்குகின்றார். ஈசன் சகோதரர்கள் கனவில் தோன்றி தனக்கு ஒரு சன்னதி அமைத்துத் தருமாறு கேட்டுக் கொண்டார்.

அதே நேரம் சிவ பக்தரான “சிவதீர்த்தர்” என்பவர் மூலம் சுவாமியின் ஆற்றலையும் மகிமையினையும் கேட்டு அறிந்தார். யதார்த்தி சகோதரர்கள் இருவரும் இத்தலத்திற்கு வருகை புரிந்து ஈசனை தொழுதனர். ஈசன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க விஸ்வேஸ்வரருக்கும் அம்பாளுக்கும் கருங்கல் திருப்பணிக்கு ஏற்பாடு செய்து பெரிய திருக்கோயிலை நிறுவினர். மக்கள் பெரும் அளவில் வந்து வழிபட வழி வகுத்தனர்.

பல நூற்றாண்டுகளுக்கு பின் கோவை நகரை மாதைய்யன் என்பவர் ஆட்சி புரிந்தார். இவர் காலத்தில் கோவிலைச் சுற்றி வீதிகள் அமைக்கப்பட்டன. 17ம் நூற்றாண்டில் மைசூர் மன்னர் சிக்க தேவராயாவின் கோயம்புத்தூர் பிரதிநிதியாக மாதே ராஜா இருந்தார். கோவை நகரின் முக்கிய சாலையில் அவருடைய அரண்மனை அமைந்திருந்தது. எனவே அச்சாலை ‘மாதே ராஜ மஹால் தெரு’ என்ற பெயரைப்பெற்றது. காலப் போக்கில் ‘ராஜவீதி’ என வழங்கப்பட்டு அப்பெயரே நிலைத்தும் விட்டது.

ராஜவீதியின் மிக அருகேதான் இக்கோயில் அமைந்துள்ளது. மாதே ராஜ ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து திருப்பணிகளை மேற்கொண்டதுடன் தவறாமல் வழிபாடும் செய்து வந்தார். இவ்வாறாக பல்வேறு நிலைகளில் கோவையை ஆட்சி செய்த மன்னர்கள் மூலம் கோயில் விரிவாக்கம் கண்டது. கோயில் நிர்மாணித்து நீண்ட வருடங்கள் ஆன நிலையில், கட்டிடங்கள் சிதைந்து பழுதடைந்து விட்டது. சுமார் 24 ஆண்டுகளுக்கு முன் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டனர்.

முதலில் கோயில் கட்டிய போது அமைத்திருந்த மேல் தளம் “மெட்ராஸ் டெரஸ்” என்ற வகையாகும் அத்தளத்தைப் பிரித்து எடுத்து விட்டு சிமெண்ட் கான்கிரீட் கொண்டு தளம் அமைத்தனர். அத்திருப்பணி நடந்த போது ஓர் அதிசயம் நடந்தது. கீழ் தளம் அமைக்க தோண்டிய போது அங்கு தீர்த்த கிணறு இருப்பது தெரிந்தது. அக்கிணற்றில் நீர் அதிக அளவில் இருப்பது அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. சிதிலமடைந்திருந்த உப்புற சுவற்றைச் செப்பனிட்டு, பாதுகாப்புக்காக சிமெண்டால் ஆன முடியும் அமைத்தனர். இன்று வரை இத்தீர்த்தம் தான் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இக்கோயில் அமைந்துள்ள பகுதி ஆதியில் வண்டிப் பேட்டையாக இருந்தது. போக்குவரத்து வசதிகள் இல்லாத காலத்தில் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றை வண்டிகள் மூலம் கொண்டு வந்து இறக்கிவைத்த பின் மாட்டிற்கும் வண்டிக்கும் ஓய்வு கொடுப்பார்கள். இந்த இடம் தான் வண்டிப்பேட்டை என வழங்கி வந்தது. இப்பேட்டைக்கு அருகில் கோயில் அமைந்துள்ளதால் பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி கோயில் எனப் பெயர் பெற்றது.

தகவல்:வி.பி. ஆலாலசுந்தரம், கோவை

இக்கோயிலில் குடிகொண்டுள்ள ‘சித்தி விநாயகர்’ கண்பார்வை போன அர்ச்சகருக்கு கண்பார்வையை திரும்பக் கிடைக்கச் செய்த ஆற்றல் மிகுந்தவர். பல வருடங்களுக்கு முன் அர்ச்சகர் ஒருவர் சித்தி விநாயகர் கோயிலில்  பூஜை செய்து வந்தார். தீடிரென ஒரு நாள் கண்பார்வை மங்கியது. ஒரு கால கட்டத்தில் கண்பார்வை முழுதும் போய் விட்டது. தன் வாழ்க்கை வாழ்வாதாரம் ஆகியவற்றை எண்ணி நிலை குலைந்து போனார். பிரபல கண் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றார். பலன் இல்லை. மருத்துவரோ “தங்களுக்கு கண்பார்வை திரும்ப பெற வாய்ப்பே இல்லை. இப்படியே வாழ கற்றுக் கொள்ளுங்கள்” என அறிவுறுத்தி விட்டார்.

அர்ச்சகர் மனம் தளராமல் தினமும் கோயிலுக்கு வந்து தான் பூஜை செய்து வந்த சித்தி விநாயகர் சன்னதி முன் அமர்ந்து  வேண்டிக் கொண்டே இருந்தார். தினமும் கோயிலில் ‘கந்த புராணம்’ சொற்பொழிவு நடைபெறும். அக்காலத்தில் ஓலைச் சுவடிதான் இருந்தது. கந்த புராணமும் ஓலைச் சுவடி வடிவில்தான் இருந்தது. தான் நினைத்த காரியம் கை கூடுமா? என ஏட்டில் நூல் போட்டு பார்ப்பார்கள். ஏட்டினை ஒருவர் கையில் பிடித்த நிலையில், காரியத்தை நினைத்தவர் நூலின் இருமுனைகளையும் பிடித்துக் கொண்டு ஏட்டின் பக்கவாட்டில் சொருகுவர். பின் அப்பக்கத்தை திறந்து படித்துப் பலன் சொல்வார்கள்.

அர்ச்சகர் அவ்வாறு நூல் போட்டு பார்த்ததில் “அனந்தனுக்கு சாபம் நீங்கு படலம்” வந்தது. திருமால் ஒரு சமயம் அம்மையின் சாபத்தால் பாம்பு வடிவம் பெற்றார். ஆலங்காட்டில் ஓர் ஆலமா பொந்தில் தவம் புரிந்து கொண்டிருந்தார்.

விநாயகப் பெருமான் திருசெங்கோட்டுக் கணபதீச்சுரத்தை விட்டு தேவர்களுடன் ஆலங்காட்டை அடைந்தார். விநாயகரைக் கண்டவுடன் பாம்பு வடிவில் இருந்த திருமால் வணங்கித் துதித்தார். விநாயகருடைய அருட்கருணையினால் பாம்பு வடிவம் நீங்கி தம் பழைய வடிவத்தைப் பெற்றார். மகிழ்ச்சியுடன் விநாயகப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டார். அப்படி வழிபட்ட நாள் மார்கழி மாதம் சுக்ல பட்சத்து சஷ்டியாகும். அன்று விநாயகப் பெருமானை வழிபட்டோர் வாழ்வில் எல்லா நலன்களும் எய்துமாறு திருமால் விநாயகரிடம் வரம் பெற்றார்.

இதைப் படிக்க கேட்ட அர்ச்சகருக்கு ஓர் உத்வேகம் பிறந்தது. தானும் அவ்வாறே அந்த நாளில் விரதம் இருந்து தொழ முடிவெடுத்தார். மேலும் சித்தி விநாயகர் தனக்கு கண் பார்வை திரும்ப கிடைக்கச் செய்வார் என மன உறுதியுடன் இருந்தார். இரண்டு மார்கழியில் வணங்கியதன் பலனாக தான் இழந்த பார்வையைத் திரும்ப பெற்றார். சுமார் 90 வருடங்களாக இப்பூஜை நடந்து வருகிறது.

அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருக்கோயில் சிறப்பு:

நர்மதை நதியிலிருந்து கொண்டு வந்த பாணலிங்கம் சுயம்புக்கு அடுத்த நிலை ஆற்றல் வாய்ந்தது.

அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருக்கோயில் திருவிழாக்கள்:

இக்கோயிலில் சோமவாரம் பிரதோஷம், சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, கிருத்திகை, ராகு கால துர்க்கை பூஜை, தேய்பிறை அஷ்டமி, அமாவாசை மற்றும் பவுர்ணமி தினங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது வருட விழாக்களில் விநாயகர் சதுர்த்தி, மஹா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், அன்னாபிஷேகம், நடராஜர் அபிஷேகம், ஆடிபூரம், நவராத்திரி, கந்தர்சஷ்டி தைப்பூசம் போன்ற விழாக்கள் விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றன. சித்திரை மாதத்தில் 9 நாட்கள் கொண்டாடப்படும் “சித்திரை பெருந்திருவிழா” இத்தலத்தின் முக்கிய வருடத் திருவிழாவாகும். வாஸ்து சாந்தி பூஜையைத் தொடர்ந்து அடுத்தநாள் கொடியேற்றத்துடன் விழா துவங்கும். விழாக் காலங்களில் காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். காலை 11.30 அளவிலும் மாலை 7.00 மணியளவிலும் சூரிய பிரபை, சந்திரபிரபை, கிளி, அன்னம், பூ பல்லக்கு மற்றும் குதிரை வாகனங்களில் தினமும் புறப்பாடு நடைபெறும். ஐந்தாம் நாளன்று இரவு ரிஷப வாகன பஞ்ச மூர்த்தி புறப்பாடு நடைபெறும். இதில் விநாயகப் பெருமான் மூஷிக வாகனத்திலும் முருகன் வள்ளி தெய்வானை மயில் வாகனத்திலும் அம்பாள் கிளி வாகனத்திலும் சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் விஸ்வேஸ்வரசுவாமி ரிஷப வாகனத்திலும் புறப்பாடு நடைபெறும். முடிவில் நால்வருக்கு காட்சியருளல் இடம் பெறும். 6 ம் நாள் மாலை 6.00 மணிக்கு திருக்கல்யாண வைபவமும் தொடர்ந்து யானை வாகனப் புறப்பாடும் உண்டு.

ஏழாம் நாள் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பகவுண்டர் வீதி, இடையர்வீதி உப்பார வீதி வழியே பயணித்து கோயிலை அடையும் நிகழ்வு கண்களை விட்டு அகலாத ஒன்றாகும். 8ம் நாள் பரிவேட்டையும் நிறைவு நாளான பவுர்ணமியன்று தீர்த்தவாரி, கொடியிறக்கம், 63 நாயன்மார்கள் கூட்டு வழிபாடு ஆகியவை இடம் பெறும். இரவு 7 மணியளவில் பைரவர் பூஜையைத் தொடர்ந்து சுவாமி புறப்பாட்டுடன் இப்பெருவிழா வைபவம் நிறைவுபெறும்.

திருவிழா நாட்களில் தினமும் பக்திச் சொற்பொழிவுகளும், தேவார திருமுறை பாராயணமும் நடைபெறும். மேலும் கோயில் வளாகத்தில் 60 ஆண்டுகளாகத் தொடர்ந்து தேவார பாடசாலை இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 6.30 மணி முதல் 12.30 வரை. மாலை 5.30 முதல் இரவு 8.30 வரை திறந்திருக்கும்.

அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

நல்ல ஆரோக்கியம் கிடைக்க, திருமணத்தடை நீங்க, எதிரிகள் பயம் நீங்க, புத்திர பாக்கியம் பெற, நாள்பட்ட வியாதிகள் குணமாக இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.

அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

ருத்ர ஜபம், மிருத்ஞ்ஜய ஜபம் ஆயுள் ஹோமம் ஈசனுக்கு செய்து வழிபட நல்ல ஆரோக்கியம் கிடைக்கின்றதாம். திருமண தடை நீங்க அம்பாளுக்கு சுயம்வர பார்வதி ஜபம், எதிரிகள் தாக்கத்தை நீக்க சுப்பிரமணியருக்கு திரிசதி அர்ச்சனை, புத்திர பாக்கியம் பெற நகப்பழ இலையில் சுப்ரமணியருக்கு அர்ச்சனை என பூஜைகள் செய்து பலன்பெற்று வருகின்றனர். விஸ்வேஸ்வரர் நாள்பட்ட தீராத வியாதிகளை தீர்த்து வைப்பதில் சிறந்து விளங்குகின்றார். கருவறையில் தாரையின் நீர் பாணத்தின் மீது விழுந்து பரவி ஆவுடையார் வழியாக வழியும் தீர்த்தத்தை வியாதி உள்ளவர்கள் பிரசாதமாக எடுத்துக் கொள்ள, நோய் முற்றிலுமாக குணமாகின்றதாம்.

அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Visvesvaraya Temple:

அருள்மிகு விஸ்வேஸ்வரர் கோயில்
(பேட்டை ஈஸ்வரன்)
ராஜவீதி, கோயம்புத்துார்-641 001

அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருக்கோயில் கூகுள் மேப்:

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here