Mookambika mantra in tamil
பேரிருள் சூழ்ந்த இவ்வுலகத்தை காக்கும், ஸ்ரீ மூகாம்பிகை அன்னையின் அருளைப் பெற கீழுள்ள பாடலை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு உச்சரிப்பதன் மூலம் நம் வாழ்க்கையில் உள்ள இருள் நீங்கி, வெளிச்சம் உண்டாகும்.
விநாயகர் காப்பு
அன்னை மூகாம்பிகை அருள் சக்திதேவி தன்னை
முன்னை செய் தவப்பயனால் முன்னின்று பாடுதற்கு
கொன்றைமலர் மார்பன் கோமான்தன் மூத்த மகன்
இன்னல் களைந்திடும் இபமுகவான் தாளேசரண்.
- அகரமுதலெழுத்தின் அரனிடத்து ஆரணங்காய்
- உகர இடையெழுத்தின் உலகளந்தோன் பத்தினியாய்
- மகரக் கடையெழுத்தின் மலர்மிசையோன் மங்கையுமாய்
- மூன்றெழுத்தும் ஒன்றாகி ஓங்கார ஒலியாகி
- முச்சக்தியும் சேர்ந்து மூலப் பொருளாகி
- மூவுருவமும் இணைந்து மூகாம்பிகை ஆனவளே
- கொல்லூர் தலத்திருந்து நல்லோரைக் காப்பவளே
- முக்காலமும் தொழுதேத்தும் முன்னிற்கும் அடியேற்கு
- முக்கால நாயகியே மூலமும் உணர்த்திடுவாய்
- எக்காலமும் காத்து எளியேனை வாழவைப்பாய்
- பல்லாண்டு காலமும் பாருலகில் காத்திடுவாய்
- ஏழை பங்காளனம்மா ஏந்திழையே காத்தருள்வாய்
- பொன்மனம் உடையவளே பொற்றாமரை நாயகியே
- நீதி வழுவாமல் நிலையாகக் காத்திடுவாய்
- பொன்னாபரணம் பூண்டவளே போற்றியே துதித்திடுவேன்
- நாட்டு மக்களுக்கு நன்மைகள் பலசெய்திடுவாய்
- எண்ணித் துதிக்கும் மக்களுக்கு எவ்வரமும் தந்திடுவாய்
- அன்னையாய் நீயிருந்து அருள்ஆசி நல்கிடுவாய்
- நவரத்தின கிரீடியே நல்லாசி அருள்தருவாய்
- மைசூரின் குன்றதனில் மலர்முகத்து சாமுண்டியாய்
- காஞ்சி மாநகரத்தில் காமாட்சியாய் இருப்பவளே
- காசியம்பதி அதனில் விசாலாட்சியாய் குடிகொண்டாய்
- தென்பாண்டி மதுரையிலே தெய்வ மீனாட்சியாகி விட்டாய்
- குமரிமுனைக் கடலோரம் கருணைபொழி கன்னிகா பரமேஸ்வரியாய்
- சரவணனைப் பெற்றெடுத்த சக்தி உமையானவளே
- சான்றோரைக் காப்பவளே சதாசிவன் பத்தினியே
- வாரிவாரிக் கொடுக்கும் வரலட்சுமி யானவளே
- உள்ளங்காலில் வெள்ளெலும்பாட ஓடி உழைத்தேனம்மா
- மனதினில் உனைநினைத்து மகிழ்ச்சியுடன் நானிருப்பேன்
- கள்ளம் கபடமற்ற உள்ளம் கொடுத்து வாழ்விப்பாய்
- பாலும் தெளிதேனும் பக்குவமாய் நான் படைப்பேன்
- குற்றம் குறைபோக்கி குலதெய்வமே நீ எனக்கு
- மற்றொருவர் அறியாமல் உன் மலர்ப்பதம் காட்டிடுவாய்
- அண்டங்கள் பலபடைத்த ஆதிபராசக்தியும் நீ
- குற்றால நாயகியே குறைகளைத் தீர்த்திடுவாய்
- மூச்சுவிடும் போதெல்லாம் மூகாம்பிகை தாயே என நினைப்பேன்
- முக்கோல நாயகியே மூகாம்பிகை அன்னையரே
- சத்ரு சம்ஹாரி நீ: சதாசிவம் ஆனவள் நீ
- சிங்க வாகனமேறிச் சிங்காரி நீ வருவாய்
- பாராளும் பகவதியும் பவானியும் நீஅம்மா
- அண்ணாமலை தன்னில் உண்ணாமுலையாய் இருப்பாய்
- அகிலாண்ட ஈஸ்வரியே: ஆனைக்கா தலம் உடையவளே
- சமயபுரி மாரி நீ: சாகாவரம் கொடுப்பாய்
- தில்லையில் கூத்தாடும் தில்லைகாளி நீயம்மா
- சிவராஜன் இடம்கொண்ட சிவகாம சுந்தரியே
- திருக்கடவூர் பட்டனுக்கு திங்கள் எழச்செய்தவளே
- அருள்தந்து காத்திட்ட அன்னையே அபிராமி
- பற்பல வடிவெடுத்துப் பராசக்தி ஆனவளே
- இடம்கொண்ட நாதனுக்கு இன்பம் அளிப்பவளே
- மலையரசன் மகளாக வந்துதித்த மாமயிலே
- மாங்காடு தலத்தினிலே மலர்விழி காமாட்சி
- திருவேற்காடு கோயிலிலே கருமாரி ஆனாய் நீ
- மயிலையில் வீற்றிருக்கும் மான்விழியாள் கற்பகமே
- கோவர்த்தனகிரி எடுத்த கோபாலன் தங்கையரே
- தாயாகி வந்து நீ தனையனைக் காத்திடுவாய்
- நோயே அணுகாமல் நோக்கிடுவாய் கடைக்கண்ணால்
- பல்லோர்கள் ஏழையரைப் பலநாளும் ரட்சிக்க
- எல்லாம் வல்ல இறைவியே எந்நாளும் காத்திடுவாய்
- எத்தனை சோதனைகள் எத்தனை தரம் வந்தாலும்
- அத்தனையும் முன் நின்று அருள் தந்து ரட்சிப்பாய்
- நாடும் நகரமும் நன்மைகள் பல பெறவே
- நாயகியே வந்து நீ நாளும் காத்திடுவாய்
- வேதபுரி வாழ்கின்ற வேத திரிபுரசுந்தரியே
- படவேடு பதி அதனில் பழமையாம் ரேணுகையே
- புள்ளிருக்கு வேளூரில் தையல் நாயகி அம்மே
- மருவத்தூர் தலம் கொண்ட மாசக்தி மாரியம்மா
- சீர்காழிக் குளக்கரையில் செல்வச் சிறுகுழந்தை
- பசிதாளாது அழுகின்ற பரிதாபத்தினைப் பார்த்து
- ஞானப்பால் கொடுத்து ஞானாம்பிகை ஆனவளே
- வங்கக் கடலோரம் வங்காள தேசத்தில்
- நாடிவந்தவரைக் காக்கும் நவகாளி ஆனாய்நீ
- தேடி வந்தவரைக் காக்கும் தேவி மூகாம்பிகையே
- மலையனூர் மாகாளி அங்காள பரமேஸ்வரியே
- திருவக்கரை தலத்தினிலே வருவோரைக் காப்பதற்குத்
- துர்க்கை தெய்வமுமாகி துயரங்கள் தீர்க்கின்றாய்
- துட்டர்களை அடக்கித் துயரங்கள் போக்குகின்றாய்
- என் மனம் வாக்கு காயம் உன் மலரடிக்கே சொந்தமம்மா
- நீயல்லவோ இவ்வுலகை நித்தமும் ஆள்கின்றாய்
- காணும் இடமெல்லாம் நின் கற்கோயில் பல பெருகி
- கண்கொள்ளாக் காட்சியாய்க் கண்ணீர் மல்கி மகிழ்கின்றார்
- உணவில்லா மாந்தர்களும் உனைத்தொழுது கும்பிட்டால்
- உண்ணவும் உடுக்கவும் உளம் கனிந்து கொடுக்கின்றாய்
- பண்பா உனைப்பாடிப் பலகாலம் போற்றி செய்வேன்
- ஏழை நான் முன்னேற வழி ஒன்று சொல்லுமம்மா
- என் கால்கள் வலிதீர உன் கடைக்கண்ணால் நோக்கிடுவாய்
- தஞ்சை மாநகரத்தில் தங்கக் காமாட்சியாய்
- திருநெல்வேலித் தலமதனில் திருக்காந்திமதி தாயானாய்
- உற்றாரும் பெற்றோரும் உலகில் எனக்கு இல்லையம்மா
- நீயே எல்லாமுமாகி நித்தநித்தம் காத்திடுவாய்
- அன்பு எனும் உள்ளத்தில் அனுதினமும் நான் தொழுவேன்
- என் குலதெய்வமுமாகி என் குறைகளைத் தீர்த்திடுவாய்
- பாமாலை நான் சூடிப் பரவசமாய் தொழுகின்றேன்
- என் குடும்பக் குலவிளக்காய் குலத்தெய்வமானாய் நீ
- என்னையும் ரட்சித்து என் குடும்பத்தை காத்திடுவாய்
- குறைகளை தீர்த்து வைக்கும் குலதெய்வமானவளே
- சேயவன் தலங்கொண்ட செய்யூரின் வட்டத்தில்
- இடைக்காடர் வாழ்ந்திருந்த இடைக்கழி நாட்டினிலே
- தேங்கு மா பலாச்சோலை தெண்ணீர் ஊற்றுநீருரும்
- புதுத்தோட்டம் ஊரினிலே ஓம் சக்திவேல் குகனடிமை
- ஜானகிராமன் எனும் சொல் நாமப் பேருடையேன்
- அன்னை மூகாம்பிகையின் அருள் சக்திதனைக் கொண்டு
- நாவினால் நான்பாடி நாற்றிசையும் அருள் பொங்க
- ஊரும் உலகமும் உய்யவே மானிடரும்
- முக்கலம் மழைபொழிந்து முப்போகம் விளைந்திடவும்
- தேவாலயங்கள் பூசை தினந்தோறும் நடந்திடவும்
- நோயில்லா வாழ்வு பெற்று நல்லோர்கள் வாழ்ந்திடவும்
- மங்களம் மங்களம் எனச் சொல்லி மங்கள வாழ்த்தொலி ஒலிக்கப்
- பாடின பாட்டிவைகள் பல்லாண்டு வாழியவே.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீ மூகாம்பிகைத் தாயை மனதில் நினைத்து இப்பாடலை உச்சரித்து பூஜை செய்தால், சகல சௌபாக்கியங்களையும் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம்.
இதைப்போன்ற பல மகிமைமிக்க மந்திரங்களை காண கிளிக் செய்யவும் 👉👉 மந்திரம்
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story