Home திருக்குறள் திருக்குறள் அதிகாரம் 112 – நலம் புனைந்து உரைத்தல் Thirukkural adhikaram 112 Nalampunaindhuraiththal

திருக்குறள் அதிகாரம் 112 – நலம் புனைந்து உரைத்தல் Thirukkural adhikaram 112 Nalampunaindhuraiththal

0
திருக்குறள் அதிகாரம் 112 – நலம் புனைந்து உரைத்தல் Thirukkural adhikaram 112 Nalampunaindhuraiththal

திருக்குறள் அதிகாரம் 112 – நலம் புனைந்து உரைத்தல் Thirukkural adhikaram 112 Nalampunaindhuraiththal

குறள் 1111:

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்

மு.வ விளக்க உரை:
அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லியத் தன்மை கொண்டவள்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
அனிச்சம் பூவே! நீ எல்லாப் பூக்களிலுமே மென்மையால் சிறந்த இயல்பை உடையை வாழ்ந்து போ! ஒன்று உனக்குத் தெரியுமா? என்னால் விரும்பப்படும் என் மனைவி உன்னைக் காட்டிலும் மென்மையானவள்!

கலைஞர் விளக்க உரை:
அனிச்ச மலரின் மென்மையைப் புகழ்ந்து பாராட்டுகிறேன்; ஆனால் அந்த மலரைவிட மென்மையானவள் என் காதலி


குறள் 1112:

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று

மு.வ விளக்க உரை:
நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன, என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
நெஞ்சே நான் ஒருவனே காணும் என் மனைவியின் கண்கள், பலருங் காணும் பூக்களைப் போல் இருக்கும் என்று எண்ணி மலர்களைக் கண்டு மயங்குகிறாயே! (இதோ பார்)

கலைஞர் விளக்க உரை:
மலரைக்கண்டு மயங்குகின்ற நெஞ்சமே! இவளுடைய கண்ணைப் பார்; பலரும் கண்டு வியக்கும் மலராகவே திகழ்கிறது


குறள் 1113:

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு

மு.வ விளக்க உரை:
மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேன், முத்தே பல், இயற்கை மணமே மணம், வேலே மை உண்ட கண்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
மூங்கில் போன்ற தோளை உடைய அவளுக்கு மேனி இளந்தளிர்; பல்லோ முத்து; உடல் மணமோ நறுமணம்; மையூட்டப் பெற்ற கண்களோ வேல்!

கலைஞர் விளக்க உரை:
முத்துப்பல் வரிசை, மூங்கிலனைய தோள், மாந்தளிர் மேனி, மயக்கமூட்டும் நறுமணம், மையெழுதிய வேல்விழி; அவளே என் காதலி!


குறள் 1114:

காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று

மு.வ விளக்க உரை:
குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால், இவளுடைய கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
குவளைப் பூக்களால் காண முடியுமானால், சிறந்த அணிகளைப் பூண்டிருக்கும் என் மனைவியின் கண்ணைப் போல தாம் இருக்கமாட்டோம் என்று எண்ணி நாணத்தால் தலைகுனிந்து நிலத்தைப் பார்க்கும்.

கலைஞர் விளக்க உரை:
என் காதலியைக் குவளை மலர்கள் காண முடிந்தால், “இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக முடியவில்லையே!” எனத் தலைகுனிந்து நிலம் நோக்கும்


குறள் 1115:

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை

மு.வ விளக்க உரை:
அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினால், அவற்றால் நொந்து வருத்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
என் மனைவி தன் மென்மையை எண்ணாமல் அனிச்சம்பூவை அதன் காம்பின் அடிப்பகுதியைக் களையாமல் அப்படியே சூடிவிட்டாள். அதனால் நொந்து வருந்தும் இவள் இடுப்பிற்கு நல்ல மங்கல ஒலி இனி ஒலிக்காது.

கலைஞர் விளக்க உரை:
அவளுக்காக நல்லபறை ஒலிக்கவில்லை; ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்; காரணம், அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக்கொண்டதுதான்


குறள் 1116:

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்

மு.வ விளக்க உரை:
விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
அதோ, நிலாவிற்கும் என் மனைவியின் முகத்திற்கும் வேறுபாடு தெரியாது நட்சத்திரங்கள், தாம் இருந்த இடத்திலிருந்து இடம் விட்டுக் கலங்கித் திரிகின்றன!

கலைஞர் விளக்க உரை:
மங்கையின் முகத்துக்கும், நிலவுக்கும் வேறுபாடு தெரியாமல் விண்மீன்கள் மயங்கிக் தவிக்கின்றன


குறள் 1117:

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து

மு.வ விளக்க உரை:
குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளது போல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ.இல்லையே.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
நட்சத்திரங்கள் ஏன் கலங்க வேண்டும்? தேய்ந்து முழுமை பெறும் ஒளிமிக்க நிலாவில் இருப்பது போல என் மனைவியின் முகத்தில் மறு ஏதும் உண்டா என்ன?

கலைஞர் விளக்க உரை:
தேய்ந்தும், வளர்ந்தும் ஒளிபொழியும் நிலவில் உள்ள சிறுகளங்கம்கூட, இந்த மங்கை நல்லாள் முகத்தில் கிடையாதே!


குறள் 1118:

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி

மு.வ விளக்க உரை:
திங்களே! இம் மாதரின் முகத்தைப் போல உண்ணால் ஒளி வீச முடியுமானால், நீயும் இவள் போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
நிலவே! நீ வாழ்க! என் மனைவியின் முகம்போல் நான் மகிழும்படி ஒளிவீசுவாய் என்றால் நீயும் என் காதலைப் பெறுவாய்.

கலைஞர் விளக்க உரை:
முழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில், என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக


குறள் 1119:

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி

மு.வ விளக்க உரை:
திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
நிலவே மலர் போன்ற கண்ணை உடைய என் மனைவியின் முகம் போல ஆக நீ விரும்பினால் நான் மட்டும் காணத் தோன்று; பலரும் காணும்படி தோன்றாதே.

கலைஞர் விளக்க உரை:
நிலவே! முலரனைய கண்களையுடைய என் காதல் மங்கையின் முகத்திற்கு ஒப்பாக நீயிருப்பதாய் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டுமேயானால் (அந்தப் போட்டியில் நீ தோல்வியுறாமல் இருந்திட) பலரும் காணும்படியாக நீ தோன்றாது இருப்பதே மேல்


குறள் 1120:

அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்

மு.வ விளக்க உரை:
அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
உலகம் மென்மைக்குச் சொல்லும் அனிச்சம் பூவும், அன்னப் பறவையின் இளஞ்சிறகும், என் மனைவியின் பாதங்களுக்கு நெருஞ்சிப்பழம் போல வருத்தம் தரும்.

கலைஞர் விளக்க உரை:
அனிச்ச மலராயினும், அன்னப்பறவை இறகாயினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவுக்கு, என் காதலியின் காலடிகள்அவ்வளவு மென்மையானவை


இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here