திருக்குறள் அதிகாரம் 86- இகல் Thirukkural adhikaram 86 Ikal
குறள் 851:
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்
மு.வ விளக்க உரை:
எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய் இகழ் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
எல்லா உயிர்களிடத்திலும் இணங்கிச் சேராமல் இருக்கும் தீய குணத்தை வளர்க்கும் நோயே, மனவேறுபாடு என்று கூறுவர்.
கலைஞர் விளக்க உரை:
மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும்
குறள் 852:
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை
மு.வ விளக்க உரை:
ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும் தான் இகழ் கொண்டு அவர்க்கு துன்பம் செய்யாதிருத்தல் சிறந்ததாகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
நம்மோடு இணங்கிப் போக முடியாமல் ஒருவன் நமக்கு வெறுப்புத் தருவனவற்றைச் செய்தாலும், அவனைப் பகையாக எண்ணித் தீமை செய்யாதிருப்பது சிறந்த குணம்.
கலைஞர் விளக்க உரை:
வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஒருவன் ஈடுபடுகிறான் என்றாலும் அவனோடு கொண்டுள்ள மாறுபாடு காரணமாக அவனுக்குத் துன்பம் தரும் எதனையும் செய்யாதிருப்பதே சிறந்த பண்பாகும்
குறள் 853:
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்
மு.வ விளக்க உரை:
ஒருவன் இகல் என்று சொல்லப்படும் துன்ப நோயை நீக்கி விட்டால் அஃது அவனுக்கு அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
மனவேறுபாடு என்னும் துன்பம் தரும் நோயை மனத்திலிருந்து நீக்கினால், அது ஒருவனுக்குக் கெடாத, அழியாத புகழைக் கொடுக்கும்.
கலைஞர் விளக்க உரை:
மனமாறுபாடு என்றும் நோயை யார் தங்கள் மனத்தை விட்டு அகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும்
குறள் 854:
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்
மு.வ விளக்க உரை:
இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது அவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தை கொடுக்கும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
துன்பங்கள் எல்லாவற்றிலும் மிகக் கொடிதான மனவேறுபாடு எனும் துன்பம், ஒருவனது உள்ளத்துள் இல்லை என்றால், அது அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் சிறந்த இன்பத்தைத் தரும்.
கலைஞர் விளக்க உரை:
துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான் அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால், அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும்
குறள் 855:
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிகலூக்கும் தன்மை யவர்
மு.வ விளக்க உரை:
இகலை எதிர்த்து நிற்காமல் அதன் எதிரே சாய்ந்து நடக்க வல்லவரை வெல்லக் கருதுகின்ற ஆற்றல் உடையவர் யார்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
தன் மனத்துள் வேறுபாடு தோன்றும்போது அதை வளர்க்காமல் அதற்கு எதிராக நடக்கும் வலிமை மிக்கவரை வெல்ல எண்ணுபவர் யார்?
கலைஞர் விளக்க உரை:
மனத்தில் மாறுபாடான எண்ணம் உருவானால் அதற்கு இடம் தராமல் நடக்கக்கூடிய ஆற்றலுடையவர்களை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை
குறள் 856:
இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து
மு.வ விளக்க உரை:
இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிபோதலும் அழிதலும் விரைவவில் உள்ளனவாம்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
பிறருடன் மனவேறுபாடு கொண்டு வளர்வது நல்லதே என்பவன் வாழ்க்கை, அழியாமல் இருப்பதும் சிறிது காலமே; அழிந்து போவதும் சிறிது காலத்திற்குள்ளேயாம்.
கலைஞர் விளக்க உரை:
மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது என எண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை விரைவில் தடம்புரண்டு கெட்டொழியும்
குறள் 857:
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்
மு.வ விளக்க உரை:
இகலை விரும்புகின்ற தீய அறிவை உடையவர் வெற்றி பொருந்துதலுக்குக் காரணமான உண்மைப் பொருளை அறியமாட்டார்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
மனவேறுபாட்டோடு கேடான அறிவையும் உடையவர், வெற்றி தரும் நீதிநூற் பொருளை அறியமாட்டார்.
கலைஞர் விளக்க உரை:
பகை உணர்வு கொள்ளும் தீய அறிவுடையவர்கள் வெற்றிக்கு வழிகாட்டும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள்
குறள் 858:
இகலிற் கெதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகலூக்கின் ஊக்குமாங் கேடு
மு.வ விளக்க உரை:
இகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல் ஒருவனுக்கு ஆக்கமாகும், அதனை எதிர்த்து வெல்லக்கருதினால் கேடு அவனிடம் வரக் கருதும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
மனவேறுபாடு தோன்றும்போது அதை வரவேற்காமல் இருப்பது ஒருவனுக்குச் செல்வமாகும்; வரவேற்பது கேட்டையே வரவேற்பதாகும்.
கலைஞர் விளக்க உரை:
மனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு நீக்கிக் கொண்டால் நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டால் தீமையும் விளையும்
குறள் 859:
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு
மு.வ விளக்க உரை:
ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலைக் கருதமாட்டான், தனக்கு கேடு தருவிக்கொள்ளும் போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒருவனுக்கு நன்மை வரும் போது காரணம் இருந்தாலும் மனவேறுபாடு கொள்ள மாட்டான்.தனக்குத் தானேகேட்டை விளைவிக்க எண்ணுபவன், காரணம் இல்லாவிட்டாலும் மனவேறுபாடு கொள்ள எண்ணுவான்.
கலைஞர் விளக்க உரை:
ஒருவன் தனக்கு நன்மை வரும்போது மாறுபாட்டை நினைக்காமலே இருப்பான் ஆனால் தனக்குத் தானே கேடு தேடிக் கொள்வதென்றால் அந்த மாறுபாட்டைப் பெரிதுபடுத்திக் கொள்வான்
குறள் 860:
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு
மு.வ விளக்க உரை:
ஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்டாகும்,அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
மன வேறுபாட்டால் துன்பம் எல்லாம் உண்டாகும். நல்லிணக்க நட்பால், நீதி என்னும் செல்வச் செருக்கு உண்டாகும்.
கலைஞர் விளக்க உரை:
மனமாறுபாடு கொண்டு பகையுணர்வைக் காட்டுவோரைத் துன்பங்கள் தொடரும் நட்புணர்வோடு செயல்படுவோர்க்குப் பெருமகிழ்ச்சி எனும் நற்பயன் விளையும்
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
[pld_simple_list limit=”9″ pagination=”false”]