திருக்குறள் அதிகாரம் 93 – கள்ளுண்ணாமை Thirukkural adhikaram 93 Kallunnaamai
குறள் 921:
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்
மு.வ உரை:
கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார்.
சாலமன் பாப்பையா உரை:
போதைப் பொருள் மீத எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார். வாழும் காலத்து மரியாதையும் இழந்த போவார்கள்.
கலைஞர் உரை:
மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல; மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்
குறள் 922:
உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்
மு.வ உரை:
கள்ளை உண்ணக் கூடாது, சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்.
சாலமன் பாப்பையா உரை:
போதைப் பொருளைப் பயன்படுத்தவேண்டா; பயன்படுத்த எண்ணினால் சான்றோரால் மதிக்கப்பட வேண்டா என்பவர் பயன்படுத்துக.
கலைஞர் உரை:
மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்
குறள் 923:
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி
மு.வ உரை:
பெற்றதாயின் முகத்திலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும், அப்படியானால் குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது எண்ணவாகும்.
சாலமன் பாப்பையா உரை:
போதைப் பொருளைப் பயன்படுத்துவது தாய் முன்பே கொடுமை; நிலைமை இப்படி இருக்கச் சான்றோர் முன்பு எப்படி மகிழ்ச்சியாகும்?
கலைஞர் உரை:
கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்
குறள் 924:
நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு
மு.வ உரை:
நாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தக்காத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே நிற்காமல் செய்வாள்.
சாலமன் பாப்பையா உரை:
போதைப் பொருளைப் பயன்படுத்துதல் என்னும் பெருங் குற்றத்தைச் செய்வார்க்கு, நாணம் என்னும் நல்ல பெண் முதுகு காட்டிப் போய் விடுவாள்.
கலைஞர் உரை:
மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்
குறள் 925:
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்
மு.வ உரை:
விளைப் பொருள் கொடுத்து கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
விலை கொடுத்தத் தன்னை அறியாத உடல் மயக்கத்தை வாங்குவது செயல் செய்யும் அறிவில்லாமை.
கலைஞர் உரை:
ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்
குறள் 926:
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்
மு.வ உரை:
உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவுமயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்.
சாலமன் பாப்பையா உரை:
உறங்குபவர், இறந்துபோனவரிலும் வேறுபட்டவர் அல்லர்; அதுபோலவே, எப்போதும் போதைப் பொருளைப் பயன்படுத்துபவர் நஞ்சு உண்பவரிலும் வேறுபட்டவர் அல்லர்.
கலைஞர் உரை:
மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்
குறள் 927:
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்
மு.வ உரை:
கள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவர், உள்ளூரில் வாழ்கின்றவரால் உள்ளான செய்திகள் ஆராயப்பட்டு எந்நாளும் சிரிக்கப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
போதைப் பொருளை மறைந்திருந்து பயன்படுத்தி மயங்குபவரை ஊருக்குள் வாழ்பவர் அறிந்து எப்போதும் இகழ்ந்து சிரிப்பர்.
கலைஞர் உரை:
மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள்
குறள் 928:
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்
தொளித்ததூஉம் ஆங்கே மிகும்
மு.வ உரை:
கள்ளுண்பவன் யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும்.
சாலமன் பாப்பையா உரை:போதைப் பொருளைப் பயன்படுத்தி அறியேன் என்று பிறர்முன் சொல்வதை விட்டுவிடுக. ஏனெனில் மனத்துக்குள் மறைத்தது, நிதானம் தவறும்போது பெரிதாக வெளிப்பட்டு விடும்.
கலைஞர் உரை:
மது அருந்துவதே இல்லை என்று ஒருவன் பொய் சொல்ல முடியாது; காரணம், அவன் மது மயக்கத்தில் இருக்கும் போது அந்த உண்மையைச் சொல்லி விடுவான்
குறள் 929:
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று
மு.வ உரை:
கள்ளுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டி தெளிவித்தல், நீரின் கீழ் மூழ்கின ஒருவனைத் தீவிளக்கு கொண்டு தேடினாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
போதைப் பொருளைப் பயன்படுத்துபவனைத் திருத்தப் பல்வேறு காரணம் காட்டுவது நீருக்குள் மூழ்கி இருப்பவனைத் தீப்பந்தத்தால் தேடுவதுபோல் ஆகும்.
கலைஞர் உரை:
குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான்
குறள் 930:
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு
மு.வ உரை:
ஒருவன் தான் கள் உண்ணாத போது கள்ளுண்டு மயங்கினவளைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ.
சாலமன் பாப்பையா உரை:
போதைப் பொருளை ஒருவன் பயன்படுத்தாத போது, அதைப் பயன்படுத்தி இருப்பவனைப் பார்த்துத் தான் பயன்படுத்தும்போது தனக்கும் இத்தகைய நிலைதானே உண்டாகும் என்று எண்ணிப் பார்க்கமாட்டானோ?
கலைஞர் உரை:
ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா?
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
[pld_simple_list limit=”9″ pagination=”false”]