மகா பிரதோஷம் அன்று சிவபெருமானை எவ்வாறு வழிபட வேண்டும்?
சனி மகா பிரதோஷம்: சனிக் கிழமை அன்று திரயோதசி திதி சேர்ந்து வருவது சனிப் பிரதோஷம்.
உலக மக்களை காப்பதற்கு பாற்கடல் விஷத்தை பருகிய ஸ்ரீ சிவபெருமானின் தரிசனத்தை பெற, கீழே உள்ள துதிகளை கூறி வழிபாடு செய்தால், வாழ்க்கையில் இன்பம் பெருகும்.
மகா பிரதோஷம் அன்று இம்மந்திரத்தை கூறி ஈசனை வழிபடும் போது, நந்தீஸ்வர பகவானையும் வழிபடுவது, அதிக நன்மை அளிக்கும்.
பிரதோஷ வேளையில் ஈசனை வழிபட அனைத்தும் சித்திக்கும். இக்காலத்தில் நந்தி தேவரை வழிபடுவது சிறப்பாகும்.
வலம் வருதல் : சாதாரண நாளில் சிவ சந்நிதியை மூன்று முறை வலம்வர வேண்டும். ஆனால் பிரதோஷ காலத்தில், சோம சூத்திரப் பிரதட்சணம் செய்ய வேண்டும்
சோமசூத்தகப் பிரதட்சிணம் என்பது முதலில் சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்கிக் கொண்டு அப்பிரதட்சணமாக (தட்சிணாமூர்த்தி சன்னதி வழியாக) சண்டேசுவரர் சன்னதி வரை சென்று அவரை வணங்கிக் கொண்டு, அப்படியே திரும்பி வந்து, முன்போல் சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்கிக் கொண்டு, வழக்கம் போல் அப்பிரதட்சணமாக ஆலயத்தை வலம் வரவேண்டும். அப்படி வலம் வரும் பொழுது சுவாமி அபிஷேக தீர்த்தம் வரும் தொட்டியை (கோமுகத்தை) கடக்காமல் அப்படியே வந்த வழியே திரும்பி, அப்பிரதட்சணமாக சன்னதிக்கு வந்து சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்க வேண்டும். இப்படி மூன்று முறை வரவேண்டும். இது அநேக அசுவமேதயாகம் செய்த பலனைத் தரும் என சான்றோர் கூறியுள்ளனர். அந்தந்த திசாபுத்திகள் நடைபெறுபவர்கள் அந்தந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்தன்று இறைவனை இவ்வாறு வலம் வருவதால் இன்னல்கள் நீங்கி நன்மைகள் பெறுவர்.
விரதம் அனுஷ்டிக்கும் முறை: வளர்பிறை தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று அதிகாலையில் எழுந்து நீராடி நித்தியக் கடன்களை முடிக்கவேண்டும். சிவாலயம் சென்று வழிபடவேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்கவேண்டும். திருமுறைகளை ஓத வேண்டும். பிரதோஷநேரம் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை. இந்நேரத்தில் சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாயநம) ஓதி வழிபட வேண்டும். வசதி உள்ளவர்கள் சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்தல் அவசியமாகும்.
நந்திதேவர் துதி
நந்திஎம் பெருமான்தன்னை நாள்தோறும் வழிப்பட்டால் புந்தியில் ஞானம் சேரும் புகழ்கல்வி தேடிவரும் இவ்வுலக இன்பம்யாவும் இவரடி தொழ உண்டு! அவ்வுலக அருளும்கூட அவர்துதி பாட உண்டு! முற்பிறவி வினைகள்யாவும் தீயிட்ட மெழுகாகும் நந்தியின் பார்வை பட நலங்கள்உடன் கிட்டும்! ஈசனுக்கு எதிர் அமர்ந்து இறைஊஞ்சல் ஆட்டுவிக்கும் நந்தீசர் நற்பாதம் நாம் தொழுவோமே!
நலந்தரும் நந்தி
கந்தனின் தந்தையைத் தான் கவனமாய்ச் சுமந்து செல்வாய் நந்தனார் வணங்குதற்கு நடையினில் விலகி நின்றாய் அந்தமாய் ஆதியாகி அகிலத்தைக் காக்க வந்தாய் நந்தியே உனைத்துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய் ஒன்பது கோள்களுக்கும் உயரிய பலன் கொடுப்பாய் பொன் பொருள் குவிய வைப்பாய் புகழையும் வளர்த்து வைப்பாய்
சிந்தனை வளங்கொடுப்பாய் சிகரத்தில் தூக்கி வைப்பாய் நந்தியே உனைத்துதித்தேன் நாடிவந்தெம்மைக் காப்பாய் மாலைகள் ஏற்க வைப்பாய் மழலைகள் பிறக்க வைப்பாய் வேலைகள் கிடைக்க வைப்பாய் விதியையும் மாற்றி வைப்பாய்
சோலையின் வண்ணப்பூவைச் சூடிடும் நந்தி தேவா நாளும் நான் உனைத் துதித்தேன் நாடி வந்தெம்மைக்காப்பாய் தஞ்சையில் பெரிய நந்தி தளிருடல் வெண்ணை சாத்தி அஞ்சாத வேந்தன் நந்தி அழகிய நெகமம் நந்தி குஞ்சர முகத்தான் தந்தை குந்திடும் ரிஷப நந்தி தஞ்சமாம் உனையடைந்தேன் தயங்காது எம்மைக் காப்பாய்
பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்தி பார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்தி நல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி நாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்தி
செங்கரும்பு உணவு மாலை அணியும் நந்தி சிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்தி மங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்தி மனிதர்களின் துயர் போக்க வந்த நந்தி
அருகம்புல் மாலையையும் அணியும் நந்தி அரியதொரு வில்வமே ஏற்ற நந்தி வரும் காலம் நலமாக வைக்கும் நந்தி வணங்குகிறோம் எமைக்காக்க வருக நந்தி
பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி பேரருளை மாந்தருக்கு வழங்கும் நந்தி வரலாறு படைத்து வரும் வல்ல நந்தி வறுமையினைஎந்நாளும் அகற்றும் நந்தி
கெட்டகனா அத்தனையும் மாற்றும் நந்தி கீர்த்தியுடன் குலம் காக்கும் இனிய நந்தி வெற்றிவரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி விதியினைத்தான் மாற்றிட விளையும் நந்தி
வேந்தன் நகர் செய்யினிலே குளிக்கும் நந்தி வியக்க வைக்கும் தஞ்சாவூர்ப் பெரிய நந்தி சேர்ந்த திருப்புன்கூரிலே சாய்ந்த நந்தி செவி சாய்த்து அருள் கொடுக்கும் செல்வ நந்தி
கும்பிட்ட பக்தர் துயர் நீக்கும் நந்தி குடம் குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி பொன் பொருளை வழங்கிடவே வந்த நந்தி புகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி
சக்தி நீ தயவு நீ தயங்கு சங்கினோசை நீ சித்தி நீ சிவனும் நீ சிவாய மாமெழுத்து நீ முத்தி நீ முதலும் நீ மூவரான தேவர் நீ அத்திபுர மும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே
ஆறு நாடு தேடினும் ஆனை சேனைதேடினும் கோடிவாசி தேடினும் குறுக்கே வந்து நிற்குமோ ஓடி இட்ட பிச்சையும் உகந்து செய்த தர்மமும் சாடிவிட்ட குதிரைபோல் தர்மம் வந்து நிற்குமே
ஒன்று மொன்று மொன்றுமே யுலகனைத்து மொன்றுமே அன்று மின்று மொன்றுமே அனாதியான தொன்றுமே கன்றல் நின்ற செம்பொனைக் களிம்பறுத்து நாட்டினால் அன்று தெய்வ மும்முள அறிந்ததே சிவாயமே
ஐயன் வந்து மெய்யகம் புகுந்தவாற தெங்கனே செய்ய திங்களங்குரும்பை நீர்புகுந்த வண்ணமே ஐயன்வந்து மெய்யகம் புகுந்து கோவில்கொண்டபின் வையகத்தில் மாந்தரோடு வாய் திறப்பதில்லையே
மூன்று மூன்று மூன்றுமே மூவர் தேவர் தேடிடும் மூன்று மஞ்செழுத்துமாய் முழங்கு மவ்வெழுத்துளே ஈன்ற தாயும் அப்பரும் இயங்குகின்ற நாதமும் தோன்று மண்டலத்திலே சொல்ல வெங்குதில்லையே
கானமற்ற காட்டகத்தில் வெந்தெழுந்த நீறுபோல் ஞானமற்ற நெஞ்சகத்தில் வல்லதேது மில்லையே ஊனமுற்ற ஜோதியோடு உணர்வு சேர்த்தடக்கினால் தேனதத்தினூரல் போல் தெளிந்ததே சிவாயமே
தாய் தந்தை குருவும் நீ சகல தேவகணங்கள் நீ சிந்தை நீ தெளிவும் நீ சித்தி முக்தி தானும் நீ விந்தும் நீ வினையும் நீ மேலதாய வேதம் நீ எந்தை நீ இறைவன் நீ என்னையாண்ட ஈசன் நீ
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய் வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (ஓம்)
என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்ததில்லையே என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்து கொண்டபின் என்னிலே இருந்த ஒன்றையாவர் காணவல்லரோ என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டவனே (ஓம்)
அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் அஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்துகூற வல்லரேல் அஞ்சல் அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே. (ஓம்)
விராட் சொரூபம்
இடதுகண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன் இடக்கை சங்குசக்கரம் வலக்கை சூலமானமழு எடுத்தபாதம் நீள்முடி எண்திசைக்கும் அப்புறம் உடல்கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே (ஓம்)
பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை மிண்டராய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனை மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை (ஓம்)
இல்லை இல்லை இல்லையென்று இயம்புகின்ற ஏழைகாள் இல்லையென்று நின்றஒன்றை இல்லை என்னலாகுமோ இல்லையல்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை எல்லைகண்டு கொண்டோரினிப் பிறப்பதிங் கில்லையே (ஓம்)
இராம நாம மகிமை
கார கார கார கார காவல் ஊழிக் காவலன் போர போர போர போர போரில் நின்ற புண்ணியன் மார மார மார மார மரங்கள் ஏழும் எய்தசீ ராம ராம ராம ராம ராம என்னும் நாமமே (ஓம்)
நமசிவாய நமசிவாய நமசிவாய மந்திரம் நாவினுக்கு உகந்த நாமம் நமசிவாய மந்திரம்
ஐந்தெழுத்து சிவபெருமான் ஆட்சி செய்யும் பீடமாம் ஆறெழுத்து சரவணனும் காட்சி நல்கும் மாடமாம் நைந்து வாழும் மக்களுக்கு நோய்நொடியைப் போக்கிட நன்மருந்தைத் கொடுக்க வந்த நீலகண்டன் மந்திரம் (நம)
வைத்தியராய்ப் பணிபுரிந்து வையகத்தைக் காக்கவே வைத்தியநாதனாய் வந்துதித்தான் சங்கரன் வைத்தியமும் பாதகமும் இங்கு வந்து சேராமல் பனிபோல் விலக வைக்கும் நமசிவாய மந்திரம் (நம)
தந்தை தாயும் தனயனோடு வாழுகின்ற வீடிது சந்தனமும் பன்னீரும் கமகமக்கும் நாடிது விந்தையோடு வியாதியெல்லாம் வேகமாக ஓடவே வெற்றிவேலன் துணை இருக்கும் வீரசேகர் மந்திரம் (நம)
ஓம் பஞ்சாட்சரனே பஞ்சமுகங் கொண்ட பரமனே போற்றி போற்றி
ஓம் சாம்பசிவ சதா சிவனே சத்குருவே போற்றி போற்றி
ஓம் ஜடையுடைய ஜடாதரனே ஜம்பு நாதா போற்றி போற்றி
ஓம் சந்திரனை சூரியனை நெருப்பைக் கொண்ட முக்கண்ணா போற்றி போற்றி
ஓம் கங்காதரனே கங்களா போற்றி போற்றி
ஓம் இடபத்தூர்ந்து செல்லும் இறைவா போற்றி போற்றி ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ
பிரதோஷ பூஜை அன்று முக்கிய அபிஷேகப் பொருட்களும் பலனும்
அபிஷேக வேளையில் பால் கொடுத்தால் – நோய் தீரும், நீண்ட ஆயுள் கிடைக்கும்
தயிர் கொடுத்தால் – பல வளமும் உண்டாகும்
தேன் கொடுத்தால் – இனிய சாரீரம் கிட்டும்
பழங்கள் கொடுத்தால் – விளைச்சல் பெருகும்
பஞ்சாமிர்தம் தந்தால் – செல்வச் செழிப்பு ஏற்படும்
நெய் கொடுத்தால் – முக்திப் பேறு கிட்டும்
இளநீர் தந்தால் – நல்ல மக்கட்பேறு
சர்க்கரை கொடுத்தால் – எதிர்ப்புகள் மறையும்
எண்ணெய் தைலம் கொடுத்தால் – சுகவாழ்வு
சந்தனம் கொடுத்தால் – சிறப்பான சக்திகள் பெறலாம்
மலர்கள் கொடுத்தால் – தெய்வ தரிசனம் கிட்டும்
பிரதோஷ பூஜையின் மகிமைகள்
மனிதர்களாகிய நாம் எத்தனை தோஷங்களுடன் ஜென்மம் எடுத்துள்ளோம் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் பிரதோஷ உபாசனையால் அத்தனை தோஷங்களையும் போக்கிக் கொள்ள முடியும். எனவே பிரதோஷ பூஜை செய்து நன்மை பெறலாம்.
பிரதோஷ பூஜை செய்தால் ஒருவருக்குக்கிட்டும் பலன்கள்
துன்பம் நீங்கி – இன்பம் எய்துவர்.
மலடு நீங்கி – மகப்பேறு பெறுவர்
கடன் நீங்கி – தனம் பெறுவர்
வறுமை ஒழிந்து – செல்வம் சேர்ப்பர்
நோய் நீங்கி – நலம் பெறுவர்.
அறியாமை நீங்கி – ஞானம் பெறுவர்
பாவம் தொலைந்து – புண்ணியம் எய்துவர்
பிறவி ஒழித்து – முக்தி அடைவர்
மஹா பிரதோஷம்
ஐந்து வருட பலன் சனிக்கிழமையில் வரும் பிரதோஷ வேளையில் நாள் முழுவதும் உபவாசம் இருந்து சிவாலயத்திற்கு சென்று இறைவழிபாடு செய்தால் 5 வருடம் தினமும் தவறாமல் ஆலய வழிபாடு செய்த பலன் கிடைக்கும். அது மட்டுமில்லாமல் யார் ஒருவர் பஞ்சமா பாதகம் அதாவது மது, மங்கை, கொலை, கொள்ளை, பொய் இவைகள் செய்கின்றார்களோ அவர்களுக்கு மஹாபாதகம் ஏற்படும். இந்த மஹா பாதகத்தை சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ பூஜை அன்று கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டால் இந்த பஞ்சமா பாதகம் விலகும்.
பலன்கள்
ஒரு வருட பலன் சனிக்கிழமை தவிர மற்ற கிழமைகளில் வரும் பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையாகிய மாலை 4.30 முதல் 6.00 மணிக்குள் அன்று முழுவதும் உபவாசம் இருந்து சிவாலயத்திற்குச் சென்று ஆலய வழிபாடு செய்தால் ஒருவருக்கு ஒரு வருடம் தினமும் ஆலயம் சென்று வழிப்பட்ட பலன் கிட்டும்.
ஒவ்வொரு மகாபிரதோஷம் அன்றும் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று சிவபெருமானை மனதில் நினைத்து இந்த ஸ்லோகத்தை கூறி வழிபட்டால், சகல ஐஸ்வரியங்களும் பெற்று இன்பமாக வாழலாம்.
pradosha kalam time today, pradosha kalam timings 2022, pradosha pooja benefits, pradosha kalam timings tomorrow, pradosham date, pradosha pooja at home, pradosha meaning in kannada, and pradosha kalam time in telugu
2 கருத்துரைகள்
Pingback: Shiva Quotes in Tamil | சிவன் பொன்மொழிகள் தமிழில் - Aanmeega Thagaval - ஆன்மிக தகவல்
Pingback: கற்பூரத்தை இப்படி பயன்படுத்தினால் வாஸ்து தோஷம் நீங்கும் | Karpooram vastu in Tamil - Aanmeega Thagaval - ஆன்மிக தகவல்