அருள்மிகு அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:
அபிவிருத்தீஸ்வரம்
அருள்மிகு அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில் வரலாறு:
பரமன் எழுந்தருளிய காவிரிக்கரைத் தலங்களுள் ஒன்று, அபிவிருத்தீஸ்வரம். காவிரியின் கிளை நதியான வெட்டாற்றின் கரையில் அமைந்த தலம். மூர்த்தி, தலம், தீர்த்தங்களால் சிறப்புற்ற தலம். காவிரியே இத்தலத்திற்குரிய தீர்த்தம். மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடிவரும் காவிரி, இத்தலத்தில் வடக்கிலிருந்து தெற்காகத் திசை திரும்பி ஓடி, சற்று தூரம் சென்றதும் மீண்டும் கிழக்கு நோக்கித் திரும்புகிறது. இதன் பொருட்டே இங்கே ஈசன் கோயில் கொண்டார் என்பது ஐதிகம். விஷ்ணு, அக்னி, பிரம்மா, இந்திரன், கந்தர்வன், சந்திரன், பராசரர், ஆஞ்சநேயர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்திரன் தனது எதிரியான விருத்திராசுரனுடன் பல காலம் போரிட்டான். ஆயினும் அவனை வெல்ல முடியவில்லை. ததீசி முனிவரின் முதுகெலும்பை ஆயுதமாகக் கொண்டு போரிட்டால், விருத்திராசுரனை விரைவில் வெல்லமுடியும் என்று அறிந்து, அவரிடம் சென்றான்.
நான் உன் பொருட்டு உயிர் துறக்கிறேன். பின்னர் என் உடலிலிருந்து முதுகெலும்பை எடுத்து ஆயுதமாக்கிக் கொள் என்று அருளினார் ததீசி. அவ்வாறே அவர் உயிர் துறந்தார். அவரது முதுகெலும்பைக்கொண்டு வஜ்ஜிராயுதம் செய்து, அதை எடுத்துக்கொண்டு போருக்குச் சென்றான், இந்திரன். இம்முறை இந்திரனின் வலிமையை எதிர்க்கமாட்டாமல் விருத்திராசுரன் கடலில் சென்று ஒளிந்துகொண்டான். கடலுக்குள் அவன் எங்கிருக்கிறான் என்று எப்படித் தெரியும்? அதனால் இந்திரன் அகத்திய முனிவரிடம் சென்று பிரார்த்தித்தான். அகத்தியரும் கடல் நீரை அள்ளிப்பருகினார். அடுத்த கணம் கடல் வற்றிவிடவே, விருத்திராசுரன் வெளிப்பட்டான். இந்திரன் அவனுடன் போரிட்டு அவனை அழித்தான். இவ்வாறாக இந்திரன், தேவர்களின் நலன் காக்க அருங்காரியம் செய்த போதிலும், ததீசி முனிவர் உயிர் துறக்கக் காரணமாகிவிட்டானே அந்தப் பாவம் இந்திரனைப் பற்றிவிட்டது. அந்தப் பாவத்தைப் போக்க தேவர்களின் ஆலோசனைப்படி அபிவிருத்தீஸ்வரத்தை அடைந்து முக்தீஸ்வரரை பூஜித்தான். அதனால் இந்திரனின் பாவம் நீங்கியது. ஒரு சமயம் திருக்கொள்ளம்புதூர் வந்தார் திருஞானசம்பந்தர்.
ஓடத்தில் ஏறினார். ஓடக்காரன் வரவில்லை. சமணர்கள் ஓடக்காரனைத் தடுத்து விட்டனர். பார்த்தார், சம்பந்தர். ஈசன் மீது பதிகம் ஒன்று பாடினார். ஓடம் தானாகவே மறுகரை அடைந்தது. திருக்கொள்ளம்புதூரை தரிசித்து விட்டு, ஆற்றின் அக்கரை வழியாகவே திருவிடைவாசல் தலத்துக்குச் சென்றார். அப்போது அக்கரையில் இருந்தபடியே அபிமுக்தீஸ்வரைப் போற்றித் தொழுது பதிகம் பாடினார் என்றும் தேவாரத்தில் கிடைக்கப் பெறாமல் போன பதிகங்களுள் இத்தலத்துப் பதிகமும் இருந்திருக்க வேண்டும் எனவும் சொல்லப்படுகிறது. மூலவர் சுயம்பு மூர்த்தம். வம்ச விருத்திக்கு பிள்ளைப்பேறும், தனவிருத்திக்கு பொருட்பேறும் அருளும் திறம் கொண்ட ஈசன் என்பதால் அபிவிருத்தீஸ்வரர் என்ற திருநாமம் கொண்டவர். அந்தப் பெயராலேயே தலத்திற்கும் அபிவிருத்தீஸ்வரம் எனப் பெயராயிற்று.
–
அருள்மிகு அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில் சிறப்பு:
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் முதல் நாளன்று சூரியனின் கதிர்கள் மேற்கு திசையிலிருந்து மாலை சரியாக 5.58 மணிக்கு மூலவரின் மீது விழுகிறது.