Home கோவில்கள் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் – Arulmigu Kailasanathar Temple, காஞ்சிபுரம்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் – Arulmigu Kailasanathar Temple, காஞ்சிபுரம்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் – Arulmigu Kailasanathar Temple, காஞ்சிபுரம்

Arulmigu Kailasanathar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Kailasanathar Temple

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் மூலவர்:

கைலாசநாதர்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் தாயார்:

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் தல விருட்சம்:

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

காஞ்சிபுரம்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வரலாறு:

பல்லவ மன்னன் மகேந்திவர்மன், பல திருப்பணிகளைச் செய்த போதிலும், அவனுக்கு தீராத ஓர் ஆசை இருந்தது. மண், மரம், செங்கல், சுண்ணாம்பு, உலோகம் ஏதுமின்றி ஓர் அற்புத ஆலயத்தை அமைத்திட வேண்டுமென்பதே அது! அதன் விளைவே, காஞ்சியில் எழுந்த கயிலாயநாதர் திருக்கோயில். அவனது மரபில் வந்த ராஜசிம்மன் கட்டிய கோயில்தான் இது!

முதலாவது பரமேசுவரனுடைய மகனான அவனுக்கு எல்லையற்ற விருப்பங் கொண்டவன் என்று பொருள் தரும் அத்யந்த காமன் என்று ஒரு பட்டப் பெயரும் உண்டு. இந்த அரிய கற்றளியைத் தோற்றுவித்து, அதில் தனது பெயரையும் பொறித்து வைத்துள்ளான். புண்ணிய நதியாகிய கங்கை ஆறு எவ்வாறு விண்ணிலிருந்து கீழே பாய்ந்து இந்த நிலவுலகம் முழுவதையும் தூய்மையாக்குகிறதோ, அது போல உவமையோடு கூடிய அண்ணலின் அருட் பிராவாகம் உலகில் பாய்ந்து உலக மக்கள் அனைவரையும் உய்விக்கிறது. அந்த கங்கை ஆறு நம்மைக் காப்பாற்றட்டும் என்ற அழகிய வணக்கச் செய்யுளுடன் துவங்குகிறது, அந்தக் கல்வெட்டுச் செய்தி. பரமேசுவரனிடமிருந்து முருகப்பெருமான் எவ்வாறு பிறந்தானோ, அதேபோல பரமேசுவரனாகிய பல்லவன் வம்சத்தில் நான், பாரத்வாஜ கோத்திரத்தைச் சார்ந்தவனாகப் பிறந்தேன் என்றும் கூறுகிறான். காஞ்சிபுரம் நகரத்தின் மேல் கோடியில் உள்ள இந்தத் திருக்கோயிலை நெருங்கும்போதே, ஓர் அழகிய கந்தர்வ விமானம் தரையில் இறங்கி நிற்கிறதோ என்ற பிரமிப்பு மேலோங்குகிறது. இது கட்டி முடிக்கப்பட்டு 1300 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது என்று கூறினால், நம்புவது கடினம். அன்றிருந்த நிலையிலேயே, அதன் அழகை தொல்லியல் துறை காப்பாற்றி வருவது, நம்மைப் பூரிப்படையச் செய்கிறது.

சிங்கங்கள் தாங்கும் கோயில் : இந்தக் கோயிலை நிர்மாணித்தவன் ராஜசிம்மன்! போரில் சிங்கம் போன்றவன் என்ற பெருமை கொண்டவன். அதனைச் சுட்டிக்காட்டும்படி, எங்கு பார்த்தாலும் சிம்மங்களே கோயிலைத் தாங்கி நிற்பது போலக் காட்சியளிக்கிறது. இந்தக் கோயிலிலே நாம் காணும் ஒவ்வொரு சிற்பமும் சிவபராக்ரமத்தின் ஒரு கதையைக் கூறுவதாக உள்ளது. வேறு எந்தக் கோயிலிலும் பார்க்க முடியாத அளவிற்கு அழகிய சிற்பங்கள் கொண்ட உள் சுற்று. சிவபெருமானின் தோற்றங்களை, அவனது பராக்கிரமங்களை நாயன்மார்கள் தங்கள் பாடல்களில் போற்றிப் பாடியுள்ள அத்தனை பாடல்களுக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன, இங்குள்ள சிற்பங்கள். ஒருபுறம் சம்கார மூர்த்தங்களாகவும் மறுபுறம் அனுக்ரக மூர்த்தங்களாகவும் அமைந்துள்ளதும், இதனை வடிவமைத்த சிற்பியின் கற்பனையையும், ஆன்மிக அறிவாற்றலையும் நமக்கு எடுத்துரைப்பதாக உள்ளது. காப்பதும் அவனே! அழிப்பதும் அவனே! என்ற அற்புதத் தத்துவம்!

மகேந்திரன், ரங்கபதாகை : தான் மட்டுமன்றி தன் மகனையும், மனைவியையும் கூட இந்த அரிய பணியில் ஈடுபடுத்தியிருக்கிறான் ராஜசிம்மன். தான் கட்டிய கோயிலுக்கு முன்னேயே மகேந்திரேசுவரம் என்ற துவிதள விமானம் கொண்ட கோயிலையும், ரங்கபதாகை என்பவளால் கட்டப்பட்ட மற்றொரு சிறு கோயிலையும் நாம் காண்கிறோம். ரங்கபதாகை, விலாசவதி என்பவர்கள் ராஜசிம்மனின் மனைவியர்.

300 பட்டப் பெயர்கள் : ராஜசிம்மனுக்கு முந்நூறுக்கும் மேலான சிறப்புப் பட்டங்கள் உள்ளன என்பதை, இந்தப் பெருங்கோயில் வளாகத்தில் உள்ள ஒவ்வொரு சிற்றாலயத்திலும் பொறித்து வைத்துள்ளதையும் காண்கிறோம். நாகரி, பல்லவ கிரந்த எழுத்து, சாதாரண பல்லவ எழுத்து, அன்னப்பட்சி போன்ற எழுத்து என நான்கு விதமான எழுத்து வடிவங்களில் அமைந்தவை இந்தச் செய்திகள்.

கருவறையில் 16 பட்டை சிவலிங்கம் : மூலவர் லிங்கத்திற்குப் பின்புறச் சுவரில், எம்பிரான், ஏலவார் குழலியோடும், பாலன் குமாரனுடன் சோமாஸ்கந்தர் வடிவில் புடைப்புச் சிற்பமாகக் காட்சி தருகிறார். காஞ்சிபுரத்தில் உள்ள அத்தனை கோயில்களிலும் இது போன்ற அமைப்பினை நாம் காண்கிறோம். நாரத முனிவர் பூஜித்ததாகக் கூறப்படும் மூலவரின் சிவலிங்கத் திருமேனி 16 பட்டை கொண்ட ÷ஷாடசலிங்கம், பளபளப்பான கறுப்புக்கல்லினாலான பெரிய திருமேனி. கருவறையையும் முகமண்டபத்தையும் சுற்றியுள்ள திருச்சுற்றிலும், வெளிச் சுவர்களிலும், பிட்சாடனர், கங்காதரர், திரிபுராந்தகர், சோமாஸ்கந்தர், துர்க்கை, திருமால் போன்ற சிற்பங்கள் அமைந்துள்ளன. சிவதாண்டவ காட்சிகளையும் காணமுடிகிறது.

புனர்ஜனனி : கருவறையைச் சுற்றி அமைந்துள்ள குறுகிய திருச்சுற்று, புனர்ஜனனி என்று அழைக்கப்படுகிறது. அதன் உள், வெளி வாயில்கள் மிகவும் குறுகலாக இருந்து, தரையில் படுத்தபடியே ஊர்ந்து சென்று, மீளும்போது, புனர்ஜன்மம் எடுத்து வந்த உணர்வே மேலோங்கி வருகிறது. இதனைச் சுற்றி வந்தால் மறுபிறவி இல்லை, பிறப்பறுத்து முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

சிவலீலார்ணவம் : மகேசனின் கூத்தையும், சம்பு நடனத்தையும் காவியங்கள் அற்புதமாய் வர்ணிக்கின்றன. அவற்றையெல்லாம் நேரில் கண்டு ரசிக்க வேண்டுமானால், கயிலாய நாதர் கோயில் பிராகாரத்திற்கு வந்து விட வேண்டும். அந்தக் காவியங்களில், கற்பனைகளாலும் எட்ட முடியாத அற்புதக் காட்சிகளைக் கண்டு, பூவுலகின் கைலாசம் இதுவே என்று வியக்கிறோம்.

யானையின் உடலை உரித்து தோலை ஆடையாகப் போர்த்திய கஜாந்தகர், திகம்பரராக கபாலம் ஏந்தி நிற்கும் பிட்சைத் தேவர், உமையோடு கூடிய உமா சகிதர், அந்தி நேரத்தில், உமையமைக்கு எதிரே டமருகம், சூலம் ஏந்தி சந்தியா தாண்டவம் ஆடும் சந்தியா தாண்டவர், பைரவர் கோலத்தில் பூதகணங்களோடு, காளிக்கு எதிராக, அத்தனை முகபாவங்களையும் வெளிக்காட்டும் சண்டதாண்டவர், வீறுகொண்டு பூமியை நோக்கி வேகமாகப் பாய்ந்த கங்கையை வேணியில் தாங்கிய கங்காதரன், பதுமனின் ஐந்தாவது தலையைக் கிள்ளியெறிந்த பிரம்ம சிரச்சேத மூர்த்தி, ஆலகால விஷத்தை உண்டு கண்டத்திலடக்கிய விஷாபஹரணர், முப்புரம் எரித்த திரிபுராந்தகர், வாமபாகம் தந்த அர்த்தநாரி, பார்த்தனுக்கு அருளிய கிருதார்ஜுன மூர்த்தி, இப்படி எத்தனை எத்தனை!

இருண்ட காலம் : பல்லவர் காலத்தையடுத்து சோழர்கள் இத்திருக்கோயிலுக்கு வழிபாட்டு நிபந்தங்களை ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து அன்னியர் படையெடுப்பால், காஞ்சி மாநகரம் சாளுக்கியர் வசம் வந்தது. கி.பி. 1356ல் விஜயநகர மன்னர், வீர கம்பண்ண உடையார் ஆலயத்தை மீண்டும் திறந்து, இழந்த சொத்துக்களை மீட்டு, திருநாமத்து காணி, திருவிருப்பு, மடவிளாகம், புனரமைப்பு செய்து பூசனைக்கும் வழி செய்தான். காஞ்சியை அழிக்க வேண்டும் என்று புகுந்தோரும், அதன் கலையழகைக் கண்டு வியந்து மெய்மறந்தனராம்.

ராஜசிம்மனும் பூசலாரும் : காடவர் கோமான் என்றழைக்கப்பட்ட பல்லவ மன்னன், கயிலைநாதர் கோயிலுக்கு குடமுழுக்கு செய்திட முடிவு செய்தான். அத்தனை ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன. குடமுழுக்கான நாளும் குறித்தாகிவிட்டது. மன்னனின் கனவில் மகேசன் தோன்றினான். அரசன் குறித்த அதே நாளில் அடியார் ஒருவர் அமைத்த திருக்கோயிலுக்கு தான் எழுந்தருள வேண்டியிருப்பதால், கயிலாச நாதர் கோயில் குடமுழுக்கை வேறு நாளில் நடத்திடுமாறு கூறினார். பூசலார் என்ற அந்த அடியார், திருநின்றவூர் எனுமிடத்தில் திருக்கோயில் அமைந்துள்ளதாக கேள்விப்பட்டு, அரசன் அங்கே சென்றான். ஆரவாரம் ஏதுமன்றி அமைதியாக இருந்தது பூசலாரின் ஊர். ஊர்மக்கள், இங்கு ஒன்றும் கோயில் எழுப்பப்பட வில்லையே என்றனர். பூசலார் என்பவர் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து ஈசனின் திருநாமத்தை ஜபித்திருப்பதை மட்டுமே கண்டான் மன்னன். பூசலாரை நெருங்கி, மகேசன் குறிப்பிட்ட கோயில் பற்றி வினவிட, அந்த அடியார், தனது மனத்துக்குள்ளேயே அழகியதோர் கோயில் அமைத்து, அன்றைய நாள் குடமுழுக்கு செய்வதாகவும் கற்பனையில் மூழ்கியிருந்ததைக் கண்டு அதிசயித்தான். பேரரசன் நிச்சயித்த நாளில், மனக்கோயில் கட்டிய பூசலாரை வாழ்த்திட மகேசுவரன் முடிவு செய்ததன் பொருள் விளங்கியது. அடியாரின் எல்லையற்ற அன்புக்கு அடிபணிந்தவன் தானே அந்த எண்குணத்தீசன். பூசலார் வசித்த திருத்தலத்திலும் ஓர் அழகிய திருக்கோயிலை நிர்மாணித்து, அதற்கு குடமுழுக்கை நிறைவேற்றிய பிறகே, காஞ்சி கைலாசநாதர் கோயில் குடமுழுக்கை முறையே நடத்தினான் பேரரசன். பூசலார் போன்ற பக்குவ நிலையை அடைவதே அறநெறியாகும்.

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் சிறப்பு:

இங்குள்ள மூலவர் 16 பட்டை கொண்ட ÷ஷாடசலிங்கமாக அருள்பாலிப்பது சிறப்பு.

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் திருவிழாக்கள்:

சிவராத்திரி, பிரதோஷம்.

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள கயிலாய நாதரை தரிசித்துச் செல்கின்றனர்.

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள கைலாசநாதருக்கு புது வஸ்திரம் சார்த்தியும், பால் அபிஷேகம் செய்தும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Kailasanathar Temple:

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம்.

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் கூகுள் மேப்:

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here