Home கோவில்கள் அருள்மிகு வில்லீஸ்வரமுடையார் திருக்கோயில் – Arulmigu Williswaramudaiyar Temple, இடிகரை

அருள்மிகு வில்லீஸ்வரமுடையார் திருக்கோயில் – Arulmigu Williswaramudaiyar Temple, இடிகரை

அருள்மிகு வில்லீஸ்வரமுடையார் திருக்கோயில் – Arulmigu Williswaramudaiyar Temple, இடிகரை

Arulmigu Williswaramudaiyar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு வில்லீஸ்வரமுடையார் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Williswaramudaiyar Temple

அருள்மிகு வில்லீஸ்வரமுடையார் திருக்கோயில் மூலவர்:

வில்லீஸ்வரமுடையார்

அருள்மிகு வில்லீஸ்வரமுடையார் திருக்கோயில் தாயார்:

வேதநாயகி

அருள்மிகு வில்லீஸ்வரமுடையார் திருக்கோயில் தல விருட்சம்:

அருள்மிகு வில்லீஸ்வரமுடையார் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

இடிகரை

அருள்மிகு வில்லீஸ்வரமுடையார் திருக்கோயில் வரலாறு:

வில்லீஸ்வரமுடையார் கோயில் கோவை அருகே உள்ள இடிகரை எனும் கிராமத்தில் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கும் குருடி மலையிலிருந்து கிழக்கு நோக்கி வரும் இரு பள்ளங்களின், இரு கரைகளுக்கு மத்தியில் அமைந்த ஊர்ப்பகுதி இருகரை என வழங்கப்பட்டு பின் மருவி இடிகரை எனப் பெயர் பெற்றது. மழை காலங்களில் இப்பள்ளங்களில் ஓடிவரும் நீர் திருப்பூர் அருகே நொய்யல் ஆற்றுடன் கலக்கிறது. ஆதிகாலத்தில் வில்வ வனம் சூழ்ந்த பகுதியாக இடிகரை எனப் பெயர் பெற்றது.

மழை காலங்களில் இப்பள்ளங்களில் ஓடி வரும் நீர் திருப்பர் அருகே நொய்யல் ஆற்றுடன் கலக்கிறது. ஆதிகாலத்தில் வில்வ வனம் சூழ்ந்த பகுதியாக இடிகரை இருந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. கொங்குநாட்டு வரலாற்றில் கி.பி. 9 முதல் கி.பி. 14 வரை உள்ள காலம் வரலாற்று சிறப்புமிக்க பொற்காலமாகும். அப்போது கொங்கு நாட்டை ஆண்டுவந்த மாமன்னன் கரிகாலன், முப்பத்தாறு சிவன்கோயில்களைக் கட்ட வேண்டும் என உறுதி பூண்டு இருந்தார். கல்லணை கட்டி சாதனை புரிந்த கரிகால் சோழன் ஒருசமயம் இடிகரை பகுதிக்கு அவர் விஜயம் செய்தபோது, வேடுவப் பெண் குறத்தி ஒருவளிடம் குறி கேட்க, உங்கள் நாடு செல்வச் செழிப்புடன் வளமையாக சிறக்கவும், மன்னரின் புத்திரதோஷம் நீங்கவும் சிவன் கோயிலைக் கட்டுமாறு சொல்ல, அவ்வாறே இக்கோயிலைக் கட்டியதாக வரலாறு. அவ்வாறு உருவானதுதான் இடிகரை வில்லீஸ்வரமுடையார் கோயில். வில்லீஸ்வரர் என்றே அழைக்கப்பட்ட ஈசன் திருநாமம் தற்போது வில்லீஸ்வரமுடையார் என வழங்கப் பெறுகிறது.

படம், தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை.

புராதன கோயில்கள் வரிசையில் இது ஒரு பவித்திரமான சாநித்யம் மிக்க ஸ்தலம். இங்கு நேரில் சென்று ஈசனைத் தரிசிப்பதால் மட்டுமே அதனை உணரவும் அனுபவிக்கவும் முடியும். பல வருடங்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை ஒட்டி நடைபெற்ற திருவீதி உலா புராணக் காலத்தை நினைவூட்டுவது போல் இருக்கும். அம்பாளின் அற்புத திருமேனி ஒரே கல்லினால் ஆனது. பிரபாவனையுடன் சதுர்புஜ நாயகியாக நின்ற திருக்கோலத்தில் மேல் கைகளில் தாமரை மலர்களை ஏந்தியும், கீழ்க்கைகளில் அபயஹஸ்த முத்திரையுடனும் எழிலான தோற்றத்தில் அருள்கிறார். பாலசுப்ரமணியன் வில்லீஸ்வர குமாரர் என அழைக்கப்படுகிறார். 1974ல் கும்பாபிஷேகம் நடந்தபின் 1986ல் நடக்க வேண்டிய கும்பாபிஷேகம் பல்வேறு காரணங்களால் நடைபெறவில்லை. பழமையான இக்கோயில் முறையான பராமரிப்பின்றி பழுதடைந்து சிதைந்த நிலையை அடைந்தது. இறையுணர்வில் நாட்டம் கொண்ட ஊர் மக்களின் பெரு முயற்சியினால் தர்ம சிந்தனையுடன் கோயில் திருப்பணிகள் செவ்வனே நடைபெற்று, பரிவார தெய்வங்களின் அமைப்போடு கோயில் புதுப்பிக்கப்பட்டது. புரதானமான கோயில்களில் திருப்பணி மேற்கொள்ளும் போது அதன் தொன்மை மாறாமல் புனரமைப்பது எளிதான காரியமல்ல.

இத்தலத்தை மிகுந்த சிரத்தையுடன் பழைய அமைப்பு மாறாமல் புனரமைத்து 10.2.14 அன்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 43 ஹோமகுண்டங்கள் அமைத்து 75 சிவாச்சாரியர்கள் கலந்து கொண்டு நான்கு கால வேள்வியுடன் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை ஒட்டி நடைபெற்ற திருவீதி உலா இதுவரை யாரும் நடத்திராவண்ணம் அற்புதமாக நிகழ்ந்தது.ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள திருவீதியை துடைப்பம், கணம் புல், மருகு, மற்றும் மரிக்கொழுந்து ஆகியவற்றால் தனித்தனியே பெருக்கி சுத்தம் செய்யப்பட்டது. தண்ணீர் தெளிந்த பின் பாதை முழுவதும் கருவி மூலம் பன்னீர் தெளிக்கப்பட்டது. அம்மை அப்பர் பவனி வரும் பாதையில் மண்ணில் பாதம் படக்கூடாது என்பதற்காக துணி விரிக்கப்பட்டது. ஊர் பந்தம் எனப்படும் மண்ணெண்ணையால் எரியும் தீப்பந்தம் தாங்கி இருவர் முன் செல்ல 60 நல்லெண்ணெய் பந்தங்களைத் தாங்கி பின் சென்றனர். மின் விளக்கொளி இல்லாமல் இயற்கையாக தீப்பந்தம் மூலம் ஒளி வெள்ளத்தில் திருவீதி உலா நிகழ்ந்தது பண்டைய காலத்தை கண்முன் நிறுத்தியது.

நந்தி தோரணத்தையும், சூரிய சந்திர பதாகைகளைத் தாங்கிச் சென்றனர். நன்கு அலங்கரிக்கப்பட்ட இருகாளை மாடுகள், நான்கு குதிரைகள், கன்றுடன் பசுமாடு என அணிவகுத்து சென்றன. அஷ்ட மங்கலப் பொருட்களான திருநீறு, சந்தனம், மஞ்சள், குங்குமம் போன்ற பொருட்களை தட்டில் ஏந்தி கன்னிப் பெண்கள் சென்றனர். பூர்ண கும்பத்தை ஒருவர் எடுத்துச் சென்றார். ஊர் முரசு கோலாட்ட குழுவினர் ஆடல் பாடலுடன் அணிவகுத்துச் சென்றனர். நீறு அணிந்து உத்திராட்சம் தரித்த சிவ செல்வர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைலாய வாத்தியங்களான உடல், நெடுந்தாரை, திருச்சின்னம், சங்கு, தாளம், உடுக்கை ஆகியவற்றை இசைத்த வண்ணம் நகர்ந்து செல்ல விநாயகப் பெருமான் நால்வர், பன்னிருதிருமுறைகள் என பின் தொடர்ந்தனர். நால்வர் போல் வேடம் தரித்த நான்கு குழந்தைகள் பவனிவர, ஒரு குழுவினர் பன்னிரு திருமுறைகளைப் பண்ணிசைத்தபடி பின் சென்றனர். அடுத்து பெரிய திருக்குடையின் கீழ் அம்மையும் அப்பரும் ரிஷப வாகனத்தில் பவனிவர குங்குலியம் எனப்படும் 11 வகையான நறுமணப் பொருட்களின் கலவையை புகைச் சட்டியில் ஏந்தி மணம் கமழ 27 பக்தர்கள் நகர்ந்து செல்ல, மணம் மிக்க மலர் இதழ்களை குழந்தைகள் இறைவன் வரும் பாதையில் தூவ இறைவனும் இறைவியும் பவனி வந்த பாங்கு கைலாய உலாவை ஒத்து இருந்தன. திருவீதி உலா முடிவில் பச்சை மட்டைகளால் அமைந்த இளைப்பாறு மண்டபத்தில் அம்மை அப்பர் இளைப்பாறி வாண வேடிக்கைகளைக் கண்டு கழித்த பின் கோயிலை அடைந்தனர். கோயில் நுழைவு வாயில் முன் மலர் மாரி பொழிந்து வரவேற்ற காட்சி கண்களை விட்டு அகலாத ஒரு நிகழ்வாகும். ஈசன் பவனி வந்த பின் மலர் இதழ்கள் மற்றவர்கள் காலில் பட்டு விடக்கூடாது என்பதற்காக, அப்படியே அவற்றை துணியுடன் சேர்த்து எடுத்து கங்கை நீரில் (கிணற்றில்) சேர்த்தனர்.  இந்நிகழ்வு ஒரு சரித்திரப் புகழ்பெற்ற திருவீதி உலா என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இவ்வுலாவை முன்னின்று ஏற்பாடு செய்தவர், மாற்று மதத்தில் பிறந்து சிவநெறியில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது கூடுதல் சிறப்பு.

அருள்மிகு வில்லீஸ்வரமுடையார் திருக்கோயில் சிறப்பு:

இடிகரை வில்லீஸ்வரமுடையார் கோயில் , வடமதுரையில் அமைந்துள்ள விருந்தீஸ்வரர் கோயில், கோவில்பாளையத்திலுள்ள காலகாலேஸ்வரர் கோயில் ஆகிய மூன்று கோயில்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன.

அருள்மிகு வில்லீஸ்வரமுடையார் திருக்கோயில் திருவிழாக்கள்:

இத்தலத்தில் சோமவாரம், சிவராத்திரி, நவராத்திரி போன்ற வைபவங்கள் கொண்டாடப்பட்டாலும் மார்கழி மாதம் வரும் ஆருத்ரா தரிசனம் சிறப்புடைய வருட பெருவிழாவாகும். இத்தலத்தில் நால்வர் குருபூஜை விழா கொண்டாடப்படுவது சிறப்பு அம்சமாகும். காமிக ஆகமப்படி இரண்டு கால பூஜைகள் தற்போது நடந்து வருகின்றன. புராதன இத்தலத்தில் பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம், ஐப்பசி அன்னாபிஷேகம், நவராத்திரி, நால்வர் குருபூஜை ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

அருள்மிகு வில்லீஸ்வரமுடையார் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு வில்லீஸ்வரமுடையார் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

திருமணதடை நோய் நொடியால் பாதிக்கப்பட்டோர் ஏராளமான பக்தர்கள் முக்கியமான பிரார்த்தனையாக வேண்டுகின்றனர்.

அருள்மிகு வில்லீஸ்வரமுடையார் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

நோய் நொடியால் பாதிக்கப்பட்டவர்களும், கோர்ட் வழக்கு, வில்லங்கம் போன்றவற்றால் நிம்மதி இழந்தவர்களும் சுவாமிக்கு விண்ணம் எழுதி, பிரதோஷ காலத்தில் அவர் பாதத்தில் வைத்து பூஜிக்கிறார்கள். அப்படிச் செய்வதால் அவர்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேறுகின்றது. வில்லீஸ்வர குமாரனுக்கு பதினொரு செவ்வாய்க்கிழமைகளில் பாலாபிஷேகம் செய்து வழிபட திருமணத் தடைகள் நீங்குவதாக பலனடைந்த பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

அருள்மிகு வில்லீஸ்வரமுடையார் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Williswaramudaiyar Temple:

அருள்மிகு வில்லீஸ்வரமுடையார் திருக்கோயில்,
இடிகரை, கோயம்புத்தூர். 641 022.

அருள்மிகு வில்லீஸ்வரமுடையார் திருக்கோயில் கூகுள் மேப்:

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here