Homeதிருக்குறள்திருக்குறள் அதிகாரம் 54 – பொச்சாவாமை Thirukkural adhikaram 54 Pochchaavaamai

திருக்குறள் அதிகாரம் 54 – பொச்சாவாமை Thirukkural adhikaram 54 Pochchaavaamai

திருக்குறள் அதிகாரம் 54 – பொச்சாவாமை Thirukkural adhikaram 54 Pochchaavaamai

குறள் 531:

இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு

மு.வ விளக்க உரை:
பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது.

கலைஞர் விளக்க உரை:
அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது


குறள் 532:

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு

மு.வ விளக்க உரை:
நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
நித்த வறுமை அறிவைக் கொன்றுவிடுவது போல, மறதி புகழைக் கெடுத்துவிடும்.

கலைஞர் விளக்க உரை:
நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல மறதி, புகழை அழித்து விடும்


குறள் 533:

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்
தெப்பானூ லோர்க்குந் துணிவு

மு.வ விளக்க உரை:
மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
மறதியை உடையவர்க்குப் புகழ் உடைமை இல்லை; இது இவ்வுலகத்தில் எந்தத் துறை நுகர்வோர்க்கும் முடிவான கருத்தாகும்.

கலைஞர் விளக்க உரை:
மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்


குறள் 534:

அச்ச முடையார்க் கரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு

மு.வ விளக்க உரை:
உள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்து பயன் இல்லை, அதுபோல் மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
மனத்துள் பயம் உள்ளவர்க்கு எத்தகைய பாதுகாப்பாலும் பயன் இல்லை. அதுபோலவே மறதி உடையவர்க்கும் பாதுகாப்பால் பயன் இல்லை.

கலைஞர் விளக்க உரை:
பயத்தினால் நடுங்குகிறவர்களுக்குத் தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்கான அரண் கட்டப்பட்டிருந்தாலும் எந்தப் பயனுமில்லை அதைப் போலவே என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் மறதி உடையவர்களுக்கு அந்த நிலையினால் எந்தப் பயனுமில்லை


குறள் 535:

முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை
பின்னூ றிரங்கி விடும்

மு.வ விளக்க உரை:
வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
துன்பங்கள் வரும் முன்பே அவற்றைத் தடுக்காமல் மறந்திருந்தவன், பின் அவை வந்தபோது தடுக்க முடியாமல் தன் பிழையை எண்ணி வருந்துவான்.

கலைஞர் விளக்க உரை:
முன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன், துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும்


குறள் 536:

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்ப தில்

மு.வ விளக்க உரை:
யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காதத் தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
எவரிடத்திலேனும் எப்போதும் விடாமல் மறதி இல்லாத குணம் மட்டும் இருக்கும் என்றால், அதைப் போன்ற நன்மை வேறு இல்லை.

கலைஞர் விளக்க உரை:
ஒருவரிடம், மறவாமை என்னும் பண்பு தவறாமல் பொருந்தியிருக்குமேயானால், அதைவிட அவருக்கு நன்மை தரக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது


குறள் 537:

அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக்
கருவியாற் போற்றிச் செயின்

மு.வ விளக்க உரை:
மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
மறதி இல்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை.

கலைஞர் விளக்க உரை:
மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை


குறள் 538:

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா
திகழ்ந்தார்க் கெழுமையும் இல்

மு.வ விளக்க உரை:
சான்றோர் புகழ்ந்து சொல்லியச் செயல்களைப் போற்றிச் செய்யவேண்டும், அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவர்க்கு ஏழுப் பிறப்பிலும் நன்மை இல்லை.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
உயர்ந்தோர் புகழ்ந்து சொன்னவற்றை விரும்பிக் கடைப்பிடிக்க வேண்டும். கடைப்பிடிக்க மறந்தவர்க்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை.

கலைஞர் விளக்க உரை:
புகழுக்குரிய கடமைகளைப் போற்றிச் செய்திடல் வேண்டும் அப்படிச் செய்யாமல் புறக்கணிக்கப்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வே இல்லை


குறள் 539:

இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து

மு.வ விளக்க உரை:
தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
தம் மகிழ்ச்சியில் மனவலிமை பெறும்பொழுது எல்லாம் முற்காலத்தில் மகிழ்ச்சியால் மறதி கொண்டு அழிந்தவர்களை நினைவிற் கொள்க.

கலைஞர் விளக்க உரை:
மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும்


குறள் 540:

உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளிய துள்ளப் பெறின்

மு.வ விளக்க உரை:
ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
நினைத்ததைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க முடியுமானால் நினைத்ததை நினைத்தபடியே அடைவது எளிது.

கலைஞர் விளக்க உரை:
கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும்

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


இதையும் படிக்கலாமே

Latest

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular