மு.வ விளக்க உரை: தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்க வல்லவர்க்கு இவ்வுலகம் உரிமை உடையது.
சாலமன் பாப்பையா விளக்க உரை: தம் செயலுக்குச் சேதம் வராமல் கண்ணோட்டம் கொள்ளும் ஆற்றல் உடையவர்க்கு இந்த உலகம் சொந்தமாகும்.
கலைஞர் விளக்க உரை: கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாக இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும்
குறள் 579:
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை
மு.வ விளக்க உரை: தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து ( அவர் செய்த குற்றத்தைப்) பொருத்துக் காக்கும் பண்பே சிறந்தது.
சாலமன் பாப்பையா விளக்க உரை: தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்திலும் கண்ணோட்டம் கொண்டு, அவர்தம் பிழையைப் பொறுக்கும் பண்பே சிறந்தது.
கலைஞர் விளக்க உரை: அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும்
குறள் 580:
பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்
மு.வ விளக்க உரை: எவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர்.
சாலமன் பாப்பையா விளக்க உரை: எல்லாராலும் விரும்பத்தக்க நாகரிகத்தை விரும்புபவர், தமக்கு நெருக்கமானவர் நஞ்சையே தருகிறார் என அறிந்தும் கண்ணோட்டம் காரணமாக அதை உண்டு அவருடன் பழகுவர்.
கலைஞர் விளக்க உரை: கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள்