திருக்குறள் அதிகாரம் 59 – ஒற்றாடல் Thirukkural adhikaram 59 Otraatal
குறள் 581:
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்
மு.வ விளக்க உரை:
ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒற்று, புகழும் தெளிவும் உள்ள நீதிநூல் இவ்விரண்டும் ஆட்சியாளரின் இரு கண் என்று அறிக.
கலைஞர் விளக்க உரை:
நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்
குறள் 582:
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்
மு.வ விளக்க உரை:
எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
பகைவர், நண்பர், பொதுவானவர் என எல்லாரிடத்திலும் நிகழ்வான எல்லாவற்றையும், எப்போதும் ஒற்றால் விரைந்து அறிந்து கொள்ள வேண்டியது அரசின் வேலை.
கலைஞர் விளக்க உரை:
நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும் எல்லா நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும்
குறள் 583:
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்த தில்
மு.வ விளக்க உரை:
ஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றிபெறத்தக்க வழி வேறு இல்லை.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
எல்லார் இடத்தும் நிகழ்வனவற்றை ஒற்றரைக் கொண்டு அறிந்து, நடப்பை தெரிந்து கொள்ளாத ஆட்சி, நிலைத்து வெற்றி பெற வேறொரு வழியே இல்லை.
கலைஞர் விளக்க உரை:
நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன் விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே இல்லை
குறள் 584:
வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங்
கனைவரையும் ஆராய்வ தொற்று
மு.வ விளக்க உரை:
தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்றுக்கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
அரசுப் பணியாளர், ஆளும் கட்சி, அதன் எதிர்கட்சியினர், அயலவர் என்று அனைவரின் சொல், செயல் கொண்டு அவர்தம் மனக்கருத்தை அறிபவரே ஒற்றர்.
கலைஞர் விளக்க உரை:
ஓர் அரசில் உளவறியும் ஒற்றர் வேலை பார்ப்பவர்கள், வேண்டியவர், வேண்டாதவர், சுற்றத்தார் என்றெல்லாம் பாகுபாடு கருதாமல் பணிபுரிந்தால்தான் அவர்களை நேர்மையான ஒற்றர்கள் எனக் கூற முடியும்
குறள் 585:
கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று
மு.வ விளக்க உரை:
ஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண் பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனதிலுள்ளதை வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றன் ஆவன்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
பிறர் சந்தேகப்படாத வேடத்தோடு சென்று, சந்தேகப்பட்டுச் சினந்தால் அஞ்சாது நின்று, சாமதானபேத தண்டம் என எந்த உபாயம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாத வல்லமை பெற்றவரே ஒற்றர்.
கலைஞர் விளக்க உரை:
சந்தேகப்பட முடியாத தோற்றத்துடனும் அப்படிச் சந்தேகப்பட்டுப் பார்ப்பவர்களுக்கு அஞ்சாமலும், என்ன நேர்ந்தாலும் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தாமலும் உள்ளவர்களே ஒற்றர்களாகப் பணியாற்ற முடியும்
குறள் 586:
துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்
தென்செயினுஞ் சோர்வில தொற்று
மு.வ விளக்க உரை:
துறந்தவரின் வடிவத்தை உடையவராய், அறிய இடங்களிலெல்லாம் சென்று ஆராய்ந்து (ஐயுற்றவர்) என்ன செய்தாலும் சோர்ந்து விடாதவரே ஒற்றர் ஆவர்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
செல்ல முடியாத இடங்களுக்கும் கூடத் துறவியர் வேடத்தில் சென்று, அறிய வேண்டுவற்றை அறிந்து, அங்கே பிடிபட்டால், பிடித்தவர் எத்தகைய துன்பம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாதவரே ஒற்றர்.
கலைஞர் விளக்க உரை:
ஆராய்ந்திட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போலக் காட்டிக்கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாதவரே சிறந்த ஒற்றர்
குறள் 587:
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பா டில்லதே ஒற்று
மு.வ விளக்க உரை:
மறைந்த செய்திகளையும் கேட்டறிய வல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணிய வல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
ரகசியமாக நடந்த செயல்களையும் அவற்றைச் செய்தவர் வாயாலேயே கேட்டு அறியும் ஆற்றல் படைத்தவராய், கேட்டவற்றுள் எத்தகைய சந்தேகமும் இல்லாதவராய் இருப்பவரே ஒற்றர்.
கலைஞர் விளக்க உரை:
மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும்
குறள் 588:
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்
மு.வ விளக்க உரை:
ஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்தச் செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டு வரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்றுக் கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஓர் ஒற்றர் கொண்டு வந்த செய்தியை இன்னும் ஓர் ஒற்றர் தரும் செய்தியோடு சரி பார்த்துக் கொள்க.
கலைஞர் விளக்க உரை:
ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது, உண்மையா அல்லவா என்ற முடிவுக்கு வரவேண்டும்
குறள் 589:
ஒற்றொற் றுணராமை யாள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்
மு.வ விளக்க உரை:
ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆள வேண்டும், அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர் மூவரின் சொல் ஒத்திருந்தால் அவை உண்மை எனத் தெளியப்படும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒற்றரை இயக்கும்போது ஓர் ஒற்றரை இன்னுமோர் ஒற்றர் அறிந்துகொள்ளாதபடி இயக்குக; ஒரு காரியத்திற்கு மூவர் சொல்லும் ஒன்றுபோலவே இருந்தாலும் அதையும் ஆய்ந்து பிறகு ஏற்றுக்கொள்க.
கலைஞர் விளக்க உரை:
ஓர் ஒற்றரை மற்றோர் ஒற்றர் அறியமுடியாதபடி மூன்று ஒற்றர்களை இயங்கவைத்து அம்மூவரும் சொல்வது ஒத்திருந்தால் அது உண்மையெனக் கொள்ளலாம்
குறள் 590:
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யிற்
புறப்படுத்தான் ஆகும் மறை
மு.வ விளக்க உரை:
ஒற்றனிடத்தில் செய்யும் சிறப்பைப் பிறர் அறியுமாறு செய்யக்கூடாது, செய்தால் மறைபொருளைத்தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
மறைவாக நிகழ்வனவற்றைஅறிந்து சொல்லும் ஒற்றருக்குப் பரிசு தருக; மறைவாகவே தருக; ஊர் அறியத் தருவது மறைவையும் ஒற்றரையும் தானே வெளிப்படுத்தியது போல் ஆகும்.
கலைஞர் விளக்க உரை:
ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால், ஒளிவு மறைவாக இருக்கவேண்டிய செய்தியை, வெளிப்படுத்தியதாகிவிடும்
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
[pld_simple_list limit=”9″ pagination=”false”]