Home திருக்குறள் திருக்குறள் அதிகாரம் 72 – அவை அறிதல் Thirukkural adhikaram 72 Avaiyaridhal

திருக்குறள் அதிகாரம் 72 – அவை அறிதல் Thirukkural adhikaram 72 Avaiyaridhal

0
திருக்குறள் அதிகாரம் 72 – அவை அறிதல் Thirukkural adhikaram 72 Avaiyaridhal

திருக்குறள் அதிகாரம் 72 – அவை அறிதல் Thirukkural adhikaram 72 Avaiyaridhal

குறள் 711:

அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்

மு.வ விளக்க உரை:
சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்றச் சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
செஞ்சொல் பொருள் வெளிப்படையான சொல் தாய் இலக்கணச் சொல்.(வெளிப்படையான பொருளை விட்டுவிட்டு வேறொன்றை உணர்த்தும் சொல் ஊர் தூங்குகிறது) குறிப்புச் சொல் வெளிப்படையான பொருளை விட்டுவிட்டுக் குறிப்பால் வேறொரு பொருள் தருவது பொன்காக்கும் பூதம் அவன்) ஆகிய சொற்களின் கூட்டத்தை அறிந்த மனத்தூய்மையை உடையவர். தமக்கும் மேலான கல்வியாளர் கூடியிருக்கும் அவை. சமமானவர் அவை. குறைவான கல்வியாளர் அவை என அவற்றின் தரம் அறிந்து அங்கே பேசும் திறத்தை ஆராய்ந்து பேசுக.

கலைஞர் விளக்க உரை:
ஒவ்வொரு சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்


குறள் 712:

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்

மு.வ விளக்க உரை:
சொற்களின் தன்மையை ஆராய்ந்த நன்மை உடையவர், அவையின் செவ்வியை ஆராய்ந்து நன்றாக உணர்ந்து சொல்ல வேண்டும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
மூவகைச் சொற்களும் பொருள் தரும் போக்கை நன்கு தெரிந்து கொண்ட நல்லறிவு படைத்தவர், சொற்குற்றமும் பொருட்குற்றமும் வந்துவிடாமல், கேட்போர் விரும்பிக் கேட்கும் நிலைமையையும் மிகத் தெளிவாக அறிந்து பேசுக.

கலைஞர் விளக்க உரை:
சொற்களின் வழிமுறையறிந்த நல்லறிவாளர்கள் அவையின் நேரத்தையும், நிலைமையையும் உணர்ந்து உரையாற்ற வேண்டும்


குறள் 713:

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்

மு.வ விளக்க உரை:
அவையின் தன்மை அறியாமல் சொல்லுதலை மேற்கொள்கின்றவர், சொற்களின் வகை அறியாதவரே, அவர் சொல்லவல்லதும் இல்லை.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
தம் பேச்சைக் கேட்கும் சபையின் இயல்பை அறியாமல் தொடர்ந்து பேசத் தொடங்குபவர், சொற்களின் கூறம் தெரியாதவர்; சொல்லும் திறமும் இல்லாதவர்.

கலைஞர் விளக்க உரை:
அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்படுத்துகிறவர்களுக்கு அந்தச் சொற்களின் வகையும் தெரியாது; பேசும் திறமையும் கிடையாது


குறள் 714:

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணங் கொளல்

மு.வ விளக்க உரை:
அறிவிற் சிறந்தவரின் முன் தானும் அறிவிற் சிறந்தவராக நடந்து கொள்ள வேண்டும், அறிவில்லாதவர் முன் தாமும் வெண் கண்ணம் போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
தன்னிலும் மேலான தனக்குச் சமமான அறிஞர் கூடியுள்ள அவையில் தன் நூல் அறிவும் சொல்வன்மையும் வெளிப்படப் பேசுக; தன் அறிவிலும் குறைவான மக்கள் கூடியுள்ள அவையில் அவருக்கு விளங்கும்படி இறங்கிப் பேசுக.

கலைஞர் விளக்க உரை:
அறிவாளிகளுக்கு முன்னால் அவர்களையொத்த பாலின் தூய்மையுடன் விளங்கும் அறிஞர்கள், அறிவில்லாதவர்கள் முன்னால் வெண்சுண்ணாம்பு போல் தம்மையும் அறிவற்றவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும்


குறள் 715:

நன்றென் றவற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு

மு.வ விளக்க உரை:
அறிவு மிகுந்தவரிடையே முந்திச் சென்று பேசாத அடக்கம் ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றிலும நல்லது.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
தன் அறிவினுக்கும் மேலான அறிஞர் கூடியுள்ள அவையில் அவர் பேசுவதற்கு முன்பாகப் பேசாமல் அடங்கி இருப்பது, நல்லது என்று சொல்லப்பட்ட குணங்களுள் எல்லாம் நல்லது.

கலைஞர் விளக்க உரை:
அறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தில் முந்திரிக் கொட்டை போல் பேசாமல் இருக்கிற அடக்கமானது எல்லா நலன்களிலும் சிறந்த நலனாகும்


குறள் 716:

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு

மு.வ விளக்க உரை:
விரிவான அறிவுத்துறைகளை அறிந்து உணர்கின்றவரின் முன்னே குற்றப்படுதல், ஒழுக்கநெறியிலிருந்து நிலைத் தளர்ந்து கெடுவதைப் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
பலதுறை நூல்பொருள்களைக் கேட்டு உணரும் திறம் மிக்கவர்முன்னே ஆற்றல்மிக்க பேச்சாளன் சொல்லால் சிறுமைப்படுவது மேலான நெறியிலிருந்து நிலைதவறி விழுவதைப் போல ஆகும்.

கலைஞர் விளக்க உரை:
அறிவுத்திறனால் பெருமை பெற்றோர் முன்னிலையில் ஆற்றிடும் உரையில் குற்றம் ஏற்படுமானால், அது ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து வீழ்ந்து விட்டதற்கு ஒப்பானதாகும்


குறள் 717:

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொற்றெரிதல் முன்னர் இழுக்கு

மு.வ விளக்க உரை:
குற்றமறச்சொற்களை ஆராயவதில் வ ல்ல அறிஞர்களிடத்தில் பல நூல்களைக் கற்றறிந்தவரின் கல்வியானது நன்றாக விளங்கித் தொன்றும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
சொற்களைப் பிழை இல்லாமல் பொருள் அறியும் ஆற்றல் படைத்தவர் கூடிய அவையில் பேசும்போது, பலவகை நூல்களையும் கற்று, அவற்றின் சிறப்பை அறிந்த பேச்சாளரின் கல்வித்திறம் அனைவருக்கும் விளங்கும்.

கலைஞர் விளக்க உரை:
மாசற்ற சொற்களைத் தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துவோரிடமே அவர் கற்றுத் தேர்ந்த கல்வியின் பெருமை விளங்கும்


குறள் 718:

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று

மு.வ விளக்க உரை:
தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
பிறர் சொல்லாமலேயே தாமே பலவற்றையும் அறிந்து கொள்ளும் அறிவுத் திறம் உடையவர் கூடியுள்ள அவையில் பேசுவது வளரும் பயிர் நிற்கும் பாத்தியில் நீரினைப் பாய்ச்சியது போலாம்.

கலைஞர் விளக்க உரை:
உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், வளரக்கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும்


குறள் 719:

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்கு செலச்சொல்லு வார்

மு.வ விளக்க உரை:
நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைப் மனதில் பதியுமாறு சொல்லவல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும் பேசக் கூடாது.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
நல்லவர் கூடி இருந்த அவையில் நல்ல பொருள்களைக் கேட்பவர் மனம் ஏற்கப் பேசும் திறம் படைத்த பேச்சாளர், அவற்றை ஏற்கும் திறம் அற்ற சிறியோர் கூடி இருக்கும் அவையில் மறந்தும் பேச வேண்டா.

கலைஞர் விளக்க உரை:
நல்லோர் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமாலிருப்பதே நலம்


குறள் 720:

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர்
அல்லார்முன் கோட்டி கொளல்

மு.வ விளக்க உரை:
தன் இனத்தார் அல்லாதவரின் கூட்டத்தில் முன் ஒரு பொருளைப்பற்றி பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம் போன்றது.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
தமக்குச் சமம் அற்றவர் கூடியுள்ள அவையில் எதையும் பேச வேண்டா; பேசினால் அப்பேச்சு சாக்கடையுள் கொட்டிய அமிழ்தம் போல ஆகும்.

கலைஞர் விளக்க உரை:
அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்களின் அவையில் பேசுவது, தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திடும் அமிழ்தம்போல் வீணாகிவிடும்

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here