Home திருக்குறள் திருக்குறள் அதிகாரம் 125-நெஞ்சொடு கிளத்தல் Thirukkural adhikaram 125 Nenjotukilaththal

திருக்குறள் அதிகாரம் 125-நெஞ்சொடு கிளத்தல் Thirukkural adhikaram 125 Nenjotukilaththal

0
திருக்குறள் அதிகாரம் 125-நெஞ்சொடு கிளத்தல் Thirukkural adhikaram 125 Nenjotukilaththal

திருக்குறள் அதிகாரம் 125-நெஞ்சொடு கிளத்தல் Thirukkural adhikaram 125 Nenjotukilaththal

குறள் 1241:

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கு மருந்து

மு.வ விளக்க உரை:
நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ?

சாலமன் பாப்பையா விளக்க உரை:
நெஞ்சே! எதனாலும் தீராத என் நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை எண்ணிப் பார்த்துச் சொல்லமாட்டாயா?

கலைஞர் விளக்க உரை:
எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட ஏதாவது ஒரு மருந்தை நினைத்துப் பார்த்து, நெஞ்சே! உன்னால் சொல்ல முடியுமா?


குறள் 1242:

காத லவரிலர் ஆகநீ நோவது
பேதமை வாழியென் நெஞ்சு

மு.வ விளக்க உரை:
என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!

சாலமன் பாப்பையா விளக்க உரை:
என் நெஞ்சே நீ வாழ்ந்து போ; அவர் நம்மீது அன்பு இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவர் வரவை எண்ணி வருந்துவது மூடத்தனமே.

கலைஞர் விளக்க உரை:
அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க


குறள் 1243:

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்

மு.வ விளக்க உரை:
நெஞ்சே (என்னுடன்) இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்? இந்தத் துன்பநோயை உண்டாக்கியவரிடம் இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை இல்லையே!

சாலமன் பாப்பையா விளக்க உரை:
நெஞ்சே! அவர் இருக்கும் இடத்திற்கும் போகாமல், இங்கே இறந்தும் போகாமல், இங்கிருந்தபடியே அவர் வருவதை எண்ணி நீ வருந்துவது ஏன்? நமக்கு இந்தத் துன்ப நோயைத் தந்தவர்க்கு நம்மீது இரக்கப்படும் எண்ணம் இல்லை.

கலைஞர் விளக்க உரை:
பிரிவுத் துன்பம் தந்த காதலருக்கு நம்மிடம் இரக்கமில்லாத போது, நெஞ்சே! நீ மட்டும் இங்கிருந்து கொண்டு அவரை எண்ணிக் கலங்குவதால் என்ன பயன்?


குறள் 1244:

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று

மு.வ விளக்க உரை:
நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
நெஞ்சே! நீ அவரைக் காணச் சென்றால் என் கண்களையும் உடன் கொண்டு செல். அவற்றை விட்டுவிட்டு நீ போய் விடுவாயானால் அவரைக் காண விரும்பும் என் கண்கள் என்னைத் தின்பன போல வருந்தும்.

கலைஞர் விளக்க உரை:
நெஞ்சே! நீ காதலரிடம் செல்லும் போது கண்களையும்கூட அழைத்துக்கொண்டு போ; இல்லையேல் அவரைக் காண வேண்டுமென்று என்னையே அவை தின்று விடுவது போல் இருக்கின்றன


குறள் 1245:

செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்

மு.வ விளக்க உரை:
நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணிக் கைவிட முடியும‌ோ?

சாலமன் பாப்பையா விளக்க உரை:
நெஞ்சே! நான் அவர்மீது அன்பு காட்டியும், என்மீது அன்பு காட்டாத அவரை, நம்மை வெறுத்தவர் என்று எண்ணிக் கைவிடும் உள்ள உறுதி எனக்கு உண்டோ?

கலைஞர் விளக்க உரை:
நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா?


குறள் 1246:

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு

மு.வ விளக்க உரை:
என் நெஞ்சே! ஊடியபோது கூடி ஊடல் உணர்த்த வல்ல காதலரைக் கண்டபோது நீ பிணங்கி உணர மாட்டாய்; பொய்யான சினங்கொண்டு காய்கினறாய்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
என் நெஞ்சே! நான் அவருடன் ஊடினால் அந்த ஊடலை என்னுடன் கூடி நீக்கவல்ல என் அன்பரைக் கண்டால் பொய்யாகவாவது கொஞ்சம் ஊடிப் பிறகு ஊடலை விட்டுக் கூடமாட்டோம். இப்போது அதையும் விட்டுவிட்டு அவரைக் கொடியவர் எனப் பொய்யாக வெறுப்பது போல் இருக்கின்றாய்; இதை விடுத்து அவரிடம் போயேன்.

கலைஞர் விளக்க உரை:
நெஞ்சே! கூடிக் கலந்து ஊடலை நீக்கும் காதலரைக் கண்டால் ஒரு தடவைகூடப் பிணங்கியறியாத நீ இப்போது அவர் மீது கொள்ளுகிற கோபம் பொய்யானது தானே?


குறள் 1247:

காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேனிவ் விரண்டு

மு.வ விளக்க உரை:
நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டு விடு; இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
நல்ல நெஞ்சே! ஒன்று காதல் விருப்பத்தை விடு; அல்லது நாணத்தை விடு; இரண்டையுமே விடமுடியாது என்பது உன் எண்ணம் என்றால், ஒன்றிற்கொன்று வேறுபட்ட இந்த இரண்டையும் சேர்த்துத் தாங்கும் ஆற்றல் எனக்கு இல்லை.

கலைஞர் விளக்க உரை:
நல்ல நெஞ்சமே! ஒன்று காதலால் துடிப்பதையாவது விட்டு விடு; அல்லது அதனைத் துணிந்து சொல்ல முடியாமல் தடுக்கும் நாணத்தையாவது விட்டு விடு இந்த இரண்டு செய்லகளையும் ஒரே நேரத்தில் தாங்கிக் கொள்ள என்னால் முடியாது


குறள் 1248:

பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதையென் நெஞ்சு

மு.வ விளக்க உரை:
என் நெஞ்சே! பிரிவுத் துன்பத்தால் வருந்தி அவர் வந்து அன்பு செய்ய வில்லையே என்று ஏங்கி பிரிந்தவரின் பின் செல்கின்றாய் பேதை.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
என் நெஞ்சே! நம் பிரிவுத் துன்பத்தை அவர் அறியார். அதனால் வருந்தி அவர் நம்மீது அன்பு காட்டாமல் இருக்கின்றார் என்று எண்ணி, நம் நிலையை அவர்க்குக் கூறுவதற்காக, அவர் பின்னே ஏங்கிச் செல்லும் நீ ஏதும் அறியாத பேதையே!

கலைஞர் விளக்க உரை:
நம்மீது இரக்கமின்றிப் பிரிந்து விட்டாரேயென்று ஏங்கிடும் அதே வேளையில் பிரிந்தவர் பின்னாலேயே சென்று கொண்டிருக்கும் என் நெஞ்சம் ஓர் அறிவற்ற பேதை போன்றதாகும்


குறள் 1249:

உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு

மு.வ விளக்க உரை:
என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?

சாலமன் பாப்பையா விளக்க உரை:
என் நெஞ்சே! நம் அன்பர் நம் மனத்திற்குள்ளேயே இருக்க, நீ அவரைத் தேடி எவரிடம் போகிறாய்?

கலைஞர் விளக்க உரை:
உள்ளத்திலேயே காதலர் குடி கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்?


குறள் 1250:

துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா
இன்னும் இழத்தும் கவின்

மு.வ விளக்க உரை:
நம்மோடு பொருந்தி இருக்காமல் கைவிட்டுச சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
நம்மைக் கலவாமல் பிரிந்து போனவரை நாம் நம் மனத்திற்குள்ளேயே கொண்டிருப்பதால் முன்பு இழந்த புற அழகை மட்டுமே அன்று இருக்கும் அக அழகையும் இழக்கப் போகிறோம்.

கலைஞர் விளக்க உரை:
சேராமல் பிரிந்து சென்ற காதலரைச் சிந்தையில் வைத்திருப்பதால் மேலும் மேனியெழில் இழந்து மெலிந்து அழிய வேண்டியுள்ளது


இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here